தமிழ்நாடு நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் கரோனா வைரஸ் தொற்று தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சி பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 08.05.2020 முதல் 14.07.2020 வரை 15 மண்டலங்களிலும் 17,134 காய்ச்சல் கண்டறியும் மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளன. இம்முகாம்களில் 10,65,981 நபர்கள் கலந்துகொண்டு பயனடைந்துள்ளனர். இவர்களில் காய்ச்சல், இருமல் மற்றும் சளி போன்ற அறிகுறிகளுடன் இருந்த 50,599 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு 12,237 நபர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் நாள்தோறும் சராசரியாக 10,000க்கும் மேல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த சில நாள்களாக தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சராசரியாக 1,200 என்ற நிலையில் குறைந்துள்ளது. மேலும் சிகிச்சையிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் சார்பில் சீர்மிகு நகரத் திட்டம், அம்ரூத் திட்டத்தில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட வேண்டிய பணிகளின் விவரம் குறித்தும், 2020-21ஆம் ஆண்டு TURIP திட்டத்தில் ரூ. 850 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தப்புள்ளி கோரிய விவரம் , 2020-21ஆம் ஆண்டு IUDM திட்டத்தில் ரூ. 450 கோடி மதிப்பீட்டிற்கு ஒப்பந்தப்புள்ளி கோரிய விவரம் குறித்தும், ஸ்மார்ட் சிட்டியில் விடுபட்ட திட்டப்பணிகளுக்கான மதிப்பீட்டிற்கு ஒப்பந்தப்புள்ளி கோரிய விவரங்கள் குறித்தும், பேரூராட்சிகளின் இயக்ககத்தின் சார்பில் குடிநீர், சாலைப்பணிகள், தெருவிளக்குகள், அனைவருக்கும் வீடுகள் போன்ற பணிகளின் நிலை குறித்து கேட்டறிந்து, ஒப்பந்தப்புள்ளி கோரும் நிலையில் உள்ள பணிகள், ஒப்பந்தப்புள்ளி வழங்க உள்ள பணிகள் குறித்து கேட்டறிந்து, நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நடைபெற்று வரும் திட்டப்பணிகளை அதற்கான காலக்கெடுவிற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். செயல்படுத்தப்பட வேண்டிய திட்டப்பணிகளுக்கு தேவையான திட்ட அறிக்கை தயாரித்தல், ஒப்பந்தப்புள்ளி கோருதல், விதிமுறைகளுக்குட்பட்டு ஒப்பந்தங்களை இறுதி செய்து பணிகளை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: வீரப்பனின் மகளுக்கு பாஜகவில் பதவி!