சென்னை: தமிழக அரசின் மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சராக இருந்து வரும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனை முடிவுக்கு வந்துள்ள நிலையில், மோசடி வழக்கில் அவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
நேற்று சுமார் 18 மணி நேரத்திற்கும் மேலாக அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட நிலையில் இன்று அதிகாலை அவரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் நடந்தது எப்போது.. இது வரை சம்பவ இடத்தில் நடந்தது என்ன?
- இரவு 11.40Pm: பணமோசடி வழக்கு தொடர்பாக தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் (ED) சோதனை தொடர்ந்து நடைபெற்றது.
- அதிகாலை 2.17Am: அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் நடந்த சோதனையை முடித்துக்கொண்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டனர், அவர்களுடன் செந்தில் பாலாஜியும் அழைத்துச் செல்லப்பட்டார்.
- அதிகாலை 2.22Am: அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்கள் வாகனத்தில் அழைத்து சென்றது குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் என்ஆர் இளங்கோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அதிகாரிகள் எங்கு அழைத்துச்செல்கிறார்கள் என்பதை தெரிவிக்கவில்லை எனக்கூறினார்.
- அதிகாலை 3.21Am: பணமோசடி வழக்கின் சோதனை முடிவுற்ற நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தீடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்கள் வாகனத்திலேயே அவரை, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். வலி தாளாமல் வாகனத்திலேயே அமைச்சர் செந்தில் பாலாஜி கதறும் வீடியோவும் வெளியானது.
- அதிகாலை 3.30Am: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை சந்தித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஆர்.இளங்கோ, அவர் சுயநினைவின்றி இருப்பதாகவும், அமலாக்கத்துறை அதிகாரிகள் சட்ட விதிமுறைகளை மீறி செயல்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் எனவும் பேட்டி அளித்தார்.
- அதிகாலை 3.40Am: தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திக்க வருகை தந்தனர்.
- அதிகாலை 3.45Am: அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வருவதாகவும், பாஜகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் எனவும் தெரிவித்தார். மேலும், பாஜகவின் இந்த மிரட்டலுக்கு திமுக ஒருபோதும் அஞ்சாது எனவும் கூறினார்.
- அதிகாலை 3.45Am: திமுக நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஆர்.இளங்கோ செய்தியாளர்களுக்கு பேட்டி: அமைச்சர் செந்தில் பாலாஜி அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவரின் உடல்நிலையை தொடர்ந்து கவனித்து வருகின்றனர். செந்தில் பாலாஜி தாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மருத்துவ அறிக்கைக்கு பிறகு உண்மை தெரிய வரும். தற்போது வரை செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார் என்ற அதிகாரப்பூர்வ அறிவுப்பு வரவில்லை.
- அதிகாலை 5.41Am: அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பாஜகவால் அமைச்சர் செந்தில் பாலாஜி குறி வைத்து சித்திரவதைக்கு ஆளாக்கப்படுகிறார் என கூறினார். மேலும், அமலாக்கத்துறை அதிகாரிகள், மனித உரிமை மற்றும் சட்ட விதிமுறைகளை மீறி 24 மணி நேரமாக செந்தில் பாலாஜியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர் எனவும் இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் எனவும் கூறினார்.
- காலை 6.39 Am: அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நூற்றுக்கணக்கில் மத்திய பாதுகாப்பு படையினர் குவிப்பு
- காலை 8.18 Am: தமிழக அமைச்சர்கள் பொன்முடி மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திக்க வருகை தந்தனர்.
- காலை 8.28 Am: அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான நடவடிக்கை பாஜகவின் பழிவாங்கும் செயல் என்பது அப்பட்டமாக தெரிகிறது. மேற்கு வங்கம், டெல்லி, தமிழகம் என பாஜக அல்லாது ஆட்சி அமைத்துள்ள அனைத்து மாநிலங்கள் மீதும் பாஜக தங்கள் ஆதிக்க ஆட்சியை செலுத்துகிறது என அமைச்சர் பொன்முடி குற்றச்சாட்டு.
- காலை 8.44 Am: கரூர்: தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது சொந்த தொகுதியான கரூரில் காவல்துறையால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- காலை 9.02 Am: ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை, தமிழக அமைச்சர்கள் ஐ.பெரியசாமி மற்றும் ஆர்.காந்தி ஆகியோர் சந்திக்க வருகை தந்தனர்.
- காலை 10.34Am: சென்னை ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். தொடர்ந்து அவர் அங்கிருந்து புறப்பட்டு வெளியேறினபோது அங்கு கூடியிருந்த திமுகவினர் ஆளுநர் ஆர்.என் ரவிக்கு எதிராக கோஷங்களை முழக்கியதால் பரபரப்பு.
இதையும் படிங்க: Senthil Balaji Arrest: அமைச்சர் செந்தில் பாலாஜி கைது - மருத்துவமனையில் அனுமதி