சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்சார அலுவலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது , "கடந்த மார்ச் 29-ஆம் தேதி 17104 மெகா வாட் மின்சாரம் தேவைப்பட்டது. ஏப்ரல், மே மாதங்கள் 3000 மெகா வாட் கொள்முதல் செய்யப்படுகிறது என்றார்.
தமிழ்நாட்டில் தினமும் 22 ரேக், 72000 டன் நிலக்கரி தேவைப்படுகிறது. ஆனால் தற்போது 48000 டன் இருந்து 50000 டன் நிலக்கரி மத்திய அரசிடம் இருந்து வருகின்றது. தமிழ்நாட்டில் ஓரிரு தினங்களில் மின் தடை என்ற பேச்சுக்கே இடம் இருக்காது. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி அதிக விலை என்பதால் கொள்முதல் செய்யவில்லை.
மத்திய தொகுப்பில் 796 மெகா வாட் தடை செய்யப்பட்டுள்ளது. அதை பெறமுடியவில்லை. 550 மெகா வாட் அளவிற்கு பற்றாகுறையை போக்குவதற்கு வேற மாநிலத்தில் இருந்து வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளோம். நம்மிடம் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் போது திருப்பி கொடுப்பதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 23 ஆம் தேதி அன்று முழுவதுமாக மின்தடை சீர் செய்யப்படும்.
4000 மெகா வாட் மின்உற்பத்தி செய்யும் பணிகளில் அனல் மின் நிலையங்கள் இயங்கிக் கொண்டிருக்கிறது. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தைப் பொருத்தவரை நாள் ஒன்றிற்கு 22,000 டன் நிலக்கரி தேவைப்படுகிறது. ஆனால் மார்ச் 24ஆம் தேதி 21,335 டன் தான் இருந்தது. பரிமாற்றம் (Exchange) மத்திய அரசை சார்ந்தது. அதில் தான் அனைத்து மாநிலங்களும் மின்சாரத்தைக் கொள்முதல் செய்கின்றனர். அதில் அதிகளவில் பணம் கொடுத்து எப்படி வாங்க முடியும்.
இதை நன்றாக அண்ணாமலை தெரிந்து பேச வேண்டும். 12 மாநிலங்களில் இது போல் ரேக் இல்லாமல் தடை ஏற்பட்டிருக்கிறது. இது அண்ணாமலைக்கு தெரியாதா? என கேள்வி எழுப்பினார். அண்ணாமலை மக்களிடம் தவறான கருத்துக்களைக் கூறி மலிவான அரசியலை செய்து வருகிறார். அண்ணாமலை அரவக்குறிச்சியில் தேர்தலுக்கு ஓட்டுக்குப் பணம் கொடுத்தார். ஆனால் அதுவும் அங்கே கைகொடுக்கவில்லை.
ஆறு மாதத்தில் 100000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்களிடம் கேட்டுப்பாருங்கள், ஏதாவது தவறு நடந்துள்ளதா ?. மின்சார வாரியம் வெளிப்படைத் தன்மையோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 2016 முதல் 2020 வரை 68 முறை மின்வெட்டு ஏற்பட்டு இருக்கிறது. 480000 டன் நிலக்கரி இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தென் மாநிலங்களுக்குத் தர வேண்டிய 2000 மெகா வாட் மின் உற்பத்தியில் தடை ஏற்பட்டுள்ளது. அதில் தமிழ்நாடும் ஒரு மாநிலம். மின்னகத்திற்கு வரும் புகார்களில் 99% சரி செய்யப்படுகிறது. நமக்கான மின் தேவையை நாமே உற்பத்தி செய்ய வேண்டும் என்பதே தமிழ்நாட்டின் இலக்காக உள்ளது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழக மின் உற்பத்தி போதுமான நிலக்கரி கிடைக்க உதவிடுமாறு மோடிக்கு ஸ்டாலின் கடிதம்