சென்னை: அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று (நவம்பர் 12) மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அதில்,“சென்னையை பொருத்தவரையில் 18 இடங்களில் மின் விநியோகம் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளது. அவை சரிசெய்யப்பட்டு சீரான மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நாகை மாவட்டம் திருவெண்காடு பகுதியில் மின் விநியோகம் 2 மணிநேரம் தடைபட்டு, பின் சரி செய்யப்பட்டது.
கொஞ்சம் மழை பெய்தாலே மின் விநியோகத்தை நிறுத்தும் சூழல் கடந்த ஆட்சியிலிருந்தது. ஆனால், தற்போது மின் விநியோகம் நிறுத்தப்படவில்லை. பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் மட்டுமே மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
3700-க்கும் மேற்பட்ட பில்லர் பாக்ஸ் ஒரு மீட்டர் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. வழக்கமான புகார்கள் தவிர, மின்வெட்டு குறித்த புகார்கள் எதுவும் மின்னகத்திற்கு வரவில்லை. 11,200 மெகாவாட் அளவுக்குத் தான் நேற்று மின் தேவை ஏற்பட்டுள்ளது. மழைக் காலம் என்பதால் மின் தேவை குறைந்துள்ளது.
100 நாட்களுக்குள் 50,000 விவசாயிகளுக்கும் இலவச மின் இணைப்பு வழங்கப்பட உள்ளது. இலவச மின்சாரத்திற்கென, இந்த ஆண்டு கூடுதலாக ரூ.4000 கோடி மானியம் அளித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மழைக்காலங்களில் பொதுமக்கள் மிக கவனமுடன் இருக்க வேண்டும்” எனப் பேசினார்.
இதையும் படிங்க: 10% இட ஒதுக்கீடும், முதலமைச்சரின் 10 கேள்விகளும்!