சென்னை: விவசாயிகளுக்கு கூடுதலாக 50 ஆயிரம் மின் இணைப்பு வழங்குவது குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, "தேர்தல் வாக்குறுதியில் கொடுத்தது போல ஏற்கனவே 1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. சமீபத்தில் வெளியிட்ட 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் அறிவிப்பில், தற்போது 34 ஆயிரம் பேருக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள 16 ஆயிரம் மின் இணைப்புகள் பொங்கலுக்குள் இணைக்கப்படும். மின் அட்டையுடன் ஆதார் எண்ணை ஏறத்தாழ 1 கோடியே 70 லட்சம் பேர் இணைத்துள்ளனர்.
விரைவில் ஸ்மார்ட் மீட்டர் வழங்குவதற்கான டெண்டர் அறிவிக்கப்பட உள்ளது. கடந்த ஆட்சியை விட தற்போது வருடத்திற்கு 80 ஆயிரம் கோடி ரூபாய் கடன் மிச்சப்படுத்தப்படுகிறது. தற்போது 32ஆயிரம் மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், 2030ஆம் ஆண்டுக்குள் 65 ஆயிரமாக மெகா வாட் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
மாதந்தோறும் மின் கணக்கு எடுக்கும் திட்டத்திற்கு அதிகளவில் ஊழியர்கள் தேவைப்படுகின்றனர். பணியாளர்கள் நியமனத்திற்கு பின் அந்த திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்படும். மின்சாரத்துறையில் உள்ள கடனை அடைப்பதற்கான சீர்திருத்தங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். மாண்டஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் அனைத்தும் சரிசெய்யப்பட்டு வருகிறது.
அடுத்தகட்டமாக விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு வழங்குவது குறித்து சட்டமன்றத்தில் முதலமைச்சர் அறிவிக்க உள்ளார். மத்திய அரசு 203 டாலருக்கு நிலக்கரியை கொள்முதல் செய்த நிலையில், தமிழக அரசு 133 டாலருக்கே கொள்முதல் செய்துள்ளது.
கரூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவருக்கான தேர்தல், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவின்படி நடைபெற்றது. வழக்கு நிலுவையில் இருந்தாலும் மக்கள் பணிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக தேர்தல் நடந்தது.
வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று வாய்க்கு வருவதை குற்றச்சாட்டாக கூறக்கூடாது. சொத்துப் பட்டியலை அண்ணாமலை பேரணி செல்லும் போது வெளியிடுவேன் என கூறியிருக்கிறார். சட்டமன்றத் தேர்தலின்போது தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்துப் பட்டியலை கொடுத்து இருப்பார்.
அண்ணாமலை கட்டிய கடிகாரத்தின் மதிப்பை வேட்புமனுவில் சேர்த்திருப்பார். இல்லையெனில் அதற்கான ரசீதை இன்று (டிச.20ஆம் தேதி) மாலைக்குள் அவர் வெளியிட வேண்டும். மடியில் கனம் இருப்பதால் அதற்கான காரணத்தைக் கூற அச்சப்படுகிறார்’ என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு இரண்டு உறுப்பினர்கள் நியமனம்!