கரோனா தொற்று விழுக்காடு மிகவும் குறைந்துள்ள நிலையில்தான் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
ஆளுநர் உரையின்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ”கடந்த ஆட்சியில் குறைந்த அளவில் 580 பேர் மட்டுமே கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், மே 7ஆம் தேதி மதுக்கடைகள் திறக்கப்பட்டபோது, எதிர்கட்சித் தலைவராக இருந்த திமுக தலைவர் ஸ்டாலின் மதுக்கடைகளை மூடக்கோரி போராட்டம் நடத்தினார்.
தமிழ்நாடு முழுவதும் கடைகளை மூடவேண்டும் என்றார். ஆனால் தற்போது 12 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில் மதுக்கடைகள் திறக்கட்டுள்ளது ஏன்?” எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “கரோனா நான்கு விழுக்காடு இருந்து போது மதுக்கடைகளை கடந்த அரசு திறந்தது. அதோடு உயர் நீதிமன்றம் கடைகளை திறக்கக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்த நிலையில், உச்ச நீதிமன்றம் சென்று மதுக்கடைகளை கடந்த அரசு திறந்தது.
மேலும் கடந்த ஆண்டு சில நாள்களிலே கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை ஒன்பது விழுக்காடு வரை உயந்த நிலையிலும் கடைகள் திறக்கப்பட்டன” எனத் தெரிவித்தார்.
மேலும், ”கடந்த 14ஆம் தேதி மதுக்கடைகள் திறக்கப்பட்டபோது 5.4 விழுக்காடாகவும், 22ஆம் தேதி 2.8 விழுக்காடாகவும் பாதிப்புகள் இருந்தன. அப்போது கூட 27 மாவட்டங்களில் மட்டுமே கடைகள் திறக்கப்பட்டன. தொற்று சற்று அதிகமாக உள்ள 11 மாவட்டங்களில் தொடர்ந்து கரோனா எண்ணிக்கை குறைந்து வந்தாலும் கடைகள் திறக்க முதலமைச்சர் அனுமதிக்கவில்லை. எனவே இந்த அரசு பற்றி தவறான தோற்றத்தை உருவாக்க வேண்டாம்” என்றும் செந்தில் பாலாஜி கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவருக்கு டெல்டா பிளஸ் கரோனா