சென்னை: கடந்த நவ.15ஆம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, இன்று (டிச.7) காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இவ்வாறு டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
முன்னதாக, சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவ்வாறு அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்தபோது, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
இதனையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர், அவர் மருத்துவக் கண்காணிப்பில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், அவருக்கு சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்பட்டதால், அடிக்கடி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சோதனைகள் மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, தனக்கு கால் மரத்துப் போவதாக மருத்துவரிடம் தெரிவித்துள்ளார். இதனால் கடந்த நவம்பர் 15ஆம் தேதி, புழல் சிறையில் இருந்து ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜி அழைத்துச் செல்லப்பட்டார்.
பின்பு ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சுமார் 20 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நலம் தேறியதால், மருத்துவமனையில் இருந்து மீண்டும் புழல் சிறைக்கு போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
மேலும், புழல் சிறையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 12வது முறையாக நீட்டிப்பு!