சென்னை: தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் உள்ள அப்பர் கோயிலில் இன்று (ஏப்.27) அதிகாலை நடந்த சித்திரை தேரோட்ட விழாவில் தேர் உயர் அழுத்த மின் கம்பி மீது உரசி விபத்துக்குள்ளானது.
இதில் சிறுவர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிரதமர், முதலமைச்சர் மற்றும் திமுக, அதிமுக சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தஞ்சாவூர் விரைந்துள்ளார். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் தஞ்சாவூர் தேர் திருவிழா விபத்து குறித்து, சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
அப்போது பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, "சப்பரம் மேல்பகுதி மடக்கும்விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மடக்கு அமைப்பானது சப்பரம் திரும்பும் இடத்தில் மடக்கப்படவில்லை. சப்பரத்தின் உச்சிப்பகுதி மடக்கப்பட்டிருந்தால் விபத்து தடுக்கப்பட்டிருக்கும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "முதலமைச்சர் ஆறுதல் கூறுவதற்காக தஞ்சாவூருக்கு நேரில் சென்று உள்ளார். இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரித்து இது போன்ற துயர நிகழ்வுகள் இனி வரக்கூடிய காலங்களில் நடைபெறாமல் தடுப்பதற்கான பரிந்துரைகளை அரசுக்கு வழங்க, வருவாய் துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் தலைமையில் ஒரு நபர் விசாரணை குழு அமைக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்" என அமைச்சர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தஞ்சை தேர் விபத்து: பேரவைக்குள் அதிமுகவினர் தர்ணா.. கடும் அமளி!