சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் 110 விதியின்கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது, 9, 10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சிப் பெறுவதாக அறிவித்தார்.
இந்நிலையில், மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்பட்டாலும் நாளை (பிப்.26) முதல் தொடர்ந்து பள்ளிக்கு வர வேண்டும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், "9 முதல் 11 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான பாடத்திட்டம் வரும் நாள்களில் நடத்தி முடிக்கப்படும். மாணவர்களின் நலன் கருதியே மாணவர்களுக்கு பொதுத்தேர்வில் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வில் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது தொடர்பாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் விமர்சனங்களை பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. எதைச் செய்தாலும் விமர்சனங்களை வைப்பதே எதிர்க்கட்சிகளின் வேலையாக இருக்கிறது.
ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் பள்ளிகள் திறப்பது தொடர்பாக உரிய நேரத்தில் ஆலோசித்து தேதி அறிவிக்கப்படும். மேலும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத மாணவர்கள் செலுத்தியுள்ள தேர்வு கட்டணத்தை திருப்பி அளிப்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: சென்னை பல்கலைக்கழக அரியர் மாணவர்கள் 99% தேர்ச்சி!