சென்னை: சென்னை கலைவாணர் அரங்கத்தில், இன்று(செப். 4) நடைபெற்ற பேரைவையில், இந்து அறநிலைத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது. இதில், பேசிய ஆரணி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன், "கோயிலில் 5 ஆண்டுகளுக்கு மேல் திருப்பணியில் இருக்கும் ஒப்பந்த பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக மாற்றவேண்டும்.
அதேபோல், ஆன்மீக தொலைக்காட்சி கொண்டுவரப்படும் என அதிமுக ஆட்சியில் அரசாணை கொண்டு வரப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" எனப் பேசினார்.
இதற்கு பதிலளித்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, "ஆன்மீக தொலைக்காட்சி என கடந்த ஓராண்டுக்கு முன்பாக அரசாணை அதிமுக ஆட்சியில் போடப்பட்டது. ஆனால், இதுவரை அதற்காக ஒரு பைசா கூட நிதி ஒதுக்கப்படவில்லை.
அதேபோல ஓராண்டுக்கு முன்பாக திருகோயில் ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அந்த விஷயத்திலும் அதிமுக ஆட்சி ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதிமுக ஆட்சியில் ஒதுக்கப்பட்ட நிதி குறைவு
கருணாநிதி முதலமைச்சராக இருந்த 2006- 2011 வரையிலான ஐந்து ஆண்டுகளில் அறநிலை துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ. 384.73 கோடி. ஆனால், 2011-2021 வரையான 10 ஆண்டுகளில் அறநிலையத்துறைக்கு ரூ. 332.47 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த 10 ஆண்டுகளில் எந்த ஒரு பணியையும் செய்ய முடியாத அளவுக்கு தான் அதிமுக அரசு இருந்தது. உங்களால் செய்ய முடியாததை தற்போது, எங்களுடைய முதலமைச்சர் செய்து வருகிறார்" என்றார்.
இதையும் படிங்க: 'பள்ளிகள் திறந்ததாலேயே மாணவர்கள் ஆசிரியர்களுக்கு தொற்று என்பது தவறான கருத்து'