சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2023 ஆம் ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடரின் மூன்றாம் நாள் இன்று (ஜன 12) நடைபெற்றது. இதில், உணவுப் பொருள் வழங்கல் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் சக்கரபாணி, “கைரேகை வைத்து பொருள் பெற இயலாத, மாற்றுத்திறனாளிகள், வயலில் வேலை செய்வோர் ரேஷன் பொருள்கள் வாங்க முடியாமல் பாதிக்கப்படுகிறார்கள்.
அதனால் கண் கருவிழி மூலம் உணவுப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே மாதிரி திட்டமாக அறிமுகப்படுத்தியுள்ளார். அந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும்” என்றார்.
இதற்கிடையே சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, கைரேகை அழிந்தவர்களுக்கு நியாய விலை கடைகளிலேயே விண்ணப்பங்களை பெறக்கூடிய வசதியை ஏற்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக் கொண்ட அமைச்சர் சக்கரபாணி, “வருவாய்துறை அலுவலகங்களுக்கு செல்லும் நிலை மாற்றப்பட்டு நியாய விலை கடைகளிலேயே இந்த விண்ணப்பங்களை கொடுக்கும் முறை அமல்படுத்தப்பட பரிசீலிக்கப்படும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: சட்டப்பேரவையில் ஆளுநரின் பொறுப்பு என்ன? - விளக்கம் அளித்த சபாநாயகர் அப்பாவு!