தமிழ்நாடு மின் ஆளுமை தொடர்பான ஆய்வுக்கூட்டம் சென்னை அண்ணா சாலையில் உள்ள மின் ஆளுமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் வருவாய்த் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் சந்தோஷ் குமார் ஆகியோர் கலந்துகொண்டு அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாடு முதலமைச்சர் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்தபடி இல்லந்தோறும் இணையம் என்ற திட்டம் தொடங்கப்படும். இதன்மூலம் அனைத்து நகரம், மற்றும் கிராம பஞ்சாயத்திலும் அதிவேக இணைய சேவை வழங்கப்படும். இந்தத் திட்டத்திற்காக மத்திய அரசிடமிருந்து நிதி உதவியை தமிழ்நாடு அரசு பெற்றுள்ளது.
இந்தியாவிலேயே தமிழ்நாடு மட்டும்தான் மின் ஆளுமையில் முன்மாதிரியாகத் திகழ்கிறது. மற்ற மாநிலங்களின் திட்டங்களைவிட தமிழ்நாடு அரசின் திட்டம் தெளிவாக இருப்பதினால் மட்டுமே இந்தத் திட்டதிற்கு நிதியை உடனே பெற முடிகிறது.
வெளிநாடுகளில் தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் அதிகளவில் வேலை பார்க்கிறார்கள். தகவல் தொழில்நுட்பத்தில் புதிய தொழில்துட்பத்தைக் கொண்டு வருவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துவருகிறது” என்றார்.
இதையும் படிங்க: அபராதத் தொகை குறைப்பது குறித்து விரைவில் அரசாணை- அமைச்சர் விஜயபாஸ்கர்