சென்னை எழிலகத்தில் மாற்றுத்திறனாளிகள் மனு அளிப்பதற்காக 'இணையவழி ஒருபக்க விண்ணப்பம், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மனு பரிசீலனைக்காண இணையதளம்' பயன்பாட்டை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் தொடர்பாக தமிழ்நாடு அரசு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.
காவிரி படுகையில் பேரிடர் மீட்புப் படை தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் மத்தியில் எவ்வித பீதியும் ஏற்படாதவாறு உரிய நடவடிக்கை மேற்கொண்டு தொடர் அறிக்கை அனுப்ப காவிரி படுகையில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. நீலகிரியில் துணை முதலமைச்சர் மேற்கொண்ட ஆய்வின் அறிக்கை, மாவட்ட நிர்வாக அறிக்கை அடிப்படையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் மத்திய அரசிடம் நிதி கோருவது குறித்து விவாதிக்கப்பட்டது” என்று கூறியுள்ளார்.
மேலும், திமுக தலைவர் ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த உதயகுமார், “முதலமைச்சர் மீது ஸ்டாலின் அபாண்டமாகக் குற்றம்சாட்டுவதாகவும், துறைசார்ந்த முதலீடுகளுக்காக வெளிநாடு செல்லும் பயணத்தைக் கொச்சைப்படுத்துவதாகவும் தெரிவித்தார். ஸ்டாலின் அரசியலில் முதிர்ச்சிப் பெறாமல் அரசின் நடவடிக்கைகளை விமர்சிப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
நீலகிரி மாவட்டத்தில் 155 இடங்களில் நிவாரண முகாம் அமைக்கப்பட்டு 5000க்கும் மேற்பட்டோர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், நீலகிரியில் இயல்பு வாழ்க்கை திரும்பிக் கொண்டிருப்பதாகவும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.