சென்னை: இந்திய குடியரசு கட்சியின் (அத்வாலே) தேசிய குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெற்றது. மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள், கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராம்தாஸ் அத்வாலே, "பாஜக கூட்டணியில் இந்திய குடியரசுக் கட்சி இருந்து வருகிறது. இந்தியா பிரதமர் மோடி தலைமையில் வளர்ந்து வருகிறது. வரும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 350 இடங்களை பிடிக்கும்.உலக நாடுகள் போற்றும் தலைவர்களில் முதல் இடத்தில் பாரத பிரதமர் மோடி இருக்கிறார். சென்னையில் இன்று இந்திய குடியரசு கட்சியின் தேசிய குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இருக்கக்கூடிய அனைத்து மாநிலத்தில் உள்ள இந்திய குடியரசு கட்சியின் தேசிய நிர்வாகிகள் மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.
காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி நடத்திய பாதயாத்திரையால் எந்தவிதமான பயனும் இல்லை. பிரதமர் மோடியை தேர்தல் பிரச்சாரத்தின் போது திருடன் என கூறியதற்காக நீதிமன்றம் 2 ஆண்டுகள் தண்டனை வழங்கி உள்ளது. அதனைத் தொடர்ந்து அவரை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து சட்ட விதிகளின் படி தகுதி இழப்பு செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு வங்காளத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறை நடைபெற்றது. நான் முஸ்லீம்களுக்கு ஆதரவாக நின்றேன். பாஜக இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என பலர் கூறுகின்றனர். ஆனால் அப்படி இல்லை அனைவரையும் அரவணைத்து செல்லக்கூடிய ஒரே கட்சி பாஜக. சிறுபான்மையினர் அதிகம் வாழும் உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜகவையே வரவேற்கின்றனர், ஆதரிக்கின்றனர்.
தமிழகத்தில் கன்னியாகுமரியில் அம்பேத்கருக்கு மிகப்பெரிய அளவில் சிலை வைக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினிடம் நான் கோரிக்கை வைக்கிறேன். தமிழகத்தில் கலப்பு திருமணத்தால் ஏற்படக்கூடிய சாதிய மோதல்கள், கொலைகள் ஆகியவற்றை தடுத்து நிறுத்த தமிழக முதலமைச்சர் முன்வர வேண்டும்.
தற்போது வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் எந்தவித அச்சுறுத்தலும் இல்லாமல் வாழ்ந்து வருகிறார்கள். மத்திய அரசு அரிசி, வீட்டு வசதி, சமையல் எரிவாயு வசதி போன்றவற்றை தமிழ்நாடு மக்களுக்கு அதிகளவில் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் தலித் கட்சிகளுக்காக தொல்.திருமாவளவன், டாக்டர் கிருஷ்ணசாமி, பூவை ஜெகன் மூர்த்தி உள்ளிட்டோர் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்திய குடியரசு கட்சியுடன் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும்.
திருமாவளவன் இருக்கும் கூட்டணி கட்சியின் காரணமாக பேசுகிறார். இது அரசியல் சார்ந்த விவகாரம் என்பதனால் அவ்வாறு செயல்படுகிறார். 50 சதவீத தலித் மக்கள் மோடியை விரும்புகின்றனர். தமிழ்நாட்டில் ஊர்க்காவல் படையினரின் ஊதியம், பணி நிரந்தம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்துவேன்" என கூறினார்.
இதையும் படிங்க: கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க சவுதி முடிவு! பெட்ரோல், டீசல் விலை உயருமா?