சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் 30 வகையான உயிரினங்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டா்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், "கிண்டி சிறுவர் பூங்கா சென்னை மக்களின் இதயமாக கருதப்படுகிறது. மேலும் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் காடாக உள்ளது. இங்கு 400 வகையான உயிரினங்கள் மக்கள் பார்வைக்கு உள்ளன. சராசரியாக 9 லட்சம் மக்கள் இங்கு வந்து செல்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து பராமரித்து, ஐந்து ஆண்டு காலத்தில் எவ்வளவு தரம் உயர்த்த முடியுமோ அவ்வளவு உயர்த்துவோம். அனைத்து உயிரியல் பூங்காவிலும் உள்ள வன விலங்குகளுக்கு கரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வண்டலூர் பூங்காவில் உள்ள சிங்கங்களை தவிர வேறு உயிரினங்களுக்கு கரோனா தொற்று இல்லை.
தமிழ்நாட்டில் உள்ள வனங்களை, 33 விழுக்காடாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். வனத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
வனத்துறைக்கு சொந்தமான இடங்களில் யாரேனும் ஆக்கிரமிப்பு செய்து நீண்ட ஆண்டுகள் இருந்தால் அவர்களுக்கு மாற்று இடம் கொடுக்கப்பட்டு ஆக்கிரமிப்பு இடங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேற்கு மாவட்டங்களில் மக்கள் வசிக்கும் பகுதியில் வன விலங்குகள் வருவதை தடுக்க காவலர்கள், அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வெளிநாடுகளிலிருந்து கூடுதலாக வரிக்குதிரை, ஒட்டகம் உள்ளிட்ட விலங்குகள் ஆறு மாதங்களுக்குள் கொண்டு வரப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: யானைகளுக்கு கரோனா பரிசோதனை - வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு!