சென்னை: தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை மற்றும் விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய 8 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. அமைச்சர் பொன்முடியின் மூத்தமகன் கவுதம சிகாமணி எம்.பி. வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை சைதாப்பேட்டை மற்றும் விழுப்புரம் சண்முகபுரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும், விழுப்புரம் விக்கிரவாண்டியில் உள்ள சூர்யா அறக்கட்டளைக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி வளாகத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படை பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள பொன்முடி இல்லத்துக்கு வந்த தடய அறிவியல் நிபுணர்கள், ஆவணங்கள் ஏதும் அழிக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்தனர். இந்நிலையில், இந்தச் சோதனையின்போது, அமைச்சர் பொன்முடிக்குச் சொந்தமான இடங்களில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்ஸிகள் மற்றும் ரூ.70 லட்சம் மதிப்பிலான இந்திய ரூபாய் உள்பட மொத்தம் ரூ.80 லட்சத்தை அமலாக்கத் துறையினர் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இந்தப் பணம் குறித்து அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத் துறை எழுப்பிய கேள்விக்கு, அமைச்சர் உரிய விளக்கம் அளிக்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதைத்தொடர்ந்து, கணக்கில் காட்டப்படாத பணம் என்பதால், அந்தத் தொகையை அமலாக்கத் துறையினர் பறிமுதல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் 13 மணி நேர சோதனைக்குப் பிறகு, அமைச்சர் பொன்முடிக்கு சம்மன் வழங்கப்பட்டு தொடர் விசாரணைக்காக சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.