திருநெல்வேலி: ஆண்டுதோறும் நவம்பர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் 'ஆத்மாக்களின் திருநாள்' என்று அழைக்கப்படும் 'கல்லறை திருநாள்' கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதாவது, இயேசு பிரான் சிலுவையில் அறையப்பட்ட மூன்றாவது நாள் உயிர்த்தெழுந்தார்.
அந்த நம்பிக்கையின் அடிப்படையில், அன்றைய தினம் கிறிஸ்தவர்கள் தங்கள் முன்னோர்கள் மற்றும் உறவினர்கள் நினைவாக, அவர்கள் ஆத்மா சாந்தி பெற அவர்கள் புதைக்கப்பட்ட கல்லறைகளுக்கு அதிகாலையே சென்று சுத்தம் செய்து, மலர் தூவி மாலை அணிவித்து, மெழுகுவர்த்தி ஏந்தி வழிபடுவது வழக்கமாகும்.
இதையும் படிங்க: வாகன விபத்தில் எஸ்எஸ்ஐ உயிரிழப்பு; அரசு நிவாரணத்தை குடும்பத்தாரிடம் வழங்கிய போலீசார்!
இதனையொட்டி, கிறிஸ்தவ மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான பாளையங்கோட்டையில், 'கல்லறை திருநாள்' காலை முதல் அனுசரிக்கப்பட்டது. சீவலப்பேரி கல்லறை தோட்டத்தில், அவர்களது உறவினர்கள் மற்றும் முன்னோர்கள் கல்லறையை சுத்தம் செய்து, வர்ணம் பூசி கல்லறை அருகே மெழுகுவர்த்தி ஏந்தி மலர் தூவியும், உணவுப் பொருட்கள் உள்ளிட்டவைகளை படைத்தும் அஞ்சலி செலுத்தினர்.
மேலும், கல்லறை தோட்டம் மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களில் முன்னோர்கள் நினைவாக சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது. நெல்லை மாநகரில் பாளையங்கோட்டை, சந்திப்பு டவுண் உள்ளிட்ட இடங்களில் கல்லறைத் திருநாள் அனுசரிக்கப்பட்டது. இதுபோன்று மாவட்ட பகுதிகளிலும் கிறிஸ்தவ மக்கள் கல்லறைத் தோட்டங்களுக்குச் சென்று வழிபட்டனர்.