சென்னை: நடப்பு ஆண்டின் இரண்டாம் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று (அக்.11) நடைபெற்று வருகின்றன. இதன்படி, காலை 10 மணிக்கு தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கேள்வி - பதில் நடத்தப்படுகிறது. இதில், சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிக்கின்றனர்.
அந்த வகையில், சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், நாகர்கோவில் தொகுதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் விடுதி கட்ட அரசு முன்வருமா எனவும், அதே போன்று 1,700க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரக்கூடிய நிலையில் போதிய அடிப்படை வசதி இல்லாமல் இருப்பதாகவும், ஆய்வகங்கள், கணினிகள் மற்றும் முதுகலை அறிவியல் பாடப் பிரிவுகளை தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, நாகர்கோவில் தொகுதி அரசு கலை அறிவியல் கல்லூரியில் கட்டிடம் கட்டுவது குறித்து ஆய்வு செய்து, தேவைக்கேற்ப முன்னுரிமை அடிப்படையில் பெருந்தலைவர் காமராஜர் திட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார்.
மேலும், அந்த கல்லூரி அருகே பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை விடுதி இருப்பதாக தெரிவித்த அவர், பள்ளி மாணவர்களுக்காக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் விடுதியும் உள்ளதாகவும், அதிலும் கல்லூரி மாணவர்களைச் சேர்க்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர் பொன்முடி குறிப்பிட்டார்.
மேலும், அரசு கலை அறிவியல் கல்லூரியில் 1,794 மாணவர்கள் படித்து வருவதாக தெரிவித்த அவர், ரூ.1,000 கோடி செலவில் காமராஜர் பெயரில் சிறப்பு திட்டத்தை முதலமைச்சர் உருவாக்கி உள்ளதாகவும், குறிப்பாக 26 பாலிடெக்னிக் கல்லூரிகள், 55 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் தேவைக்கேற்ப ஆய்வகங்கள், வகுப்பறைகள், கட்டடங்கள் கட்டுவதற்கு ரூ.262 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாகவும், படிப்படியாக தேவைக்கு ஏற்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் பதில் அளித்தார்.
இதையும் படிங்க: “அத்திக்கடவு அவிநாசி திட்டம் 2 அறிக்கை தயார்” - அமைச்சர் துரைமுருகன் தகவல்!