சென்னை: திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன் கல்வியியல் கல்லூரியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பிஎட் கலந்தாய்வை தொடங்கி வைத்தார். அதன்பின் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு உத்தரவுகளை வழங்கினார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “பிஎட் கல்லூரியில் உள்ள இடங்களுக்கு நடப்பாண்டில் நேரடியாக கலந்தாய்வு நடத்தப்படுகிறது. வரும் ஆண்டில் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படும். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பும் பணிகள் நடைபெறுகிறது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தில் கடந்த காலங்களில் பணி நியமனத்திற்கான தேர்வுகள் நடைபெறுவதில் காலதாமதம் இருந்தது உண்மைத்தான். வரும் காலங்களில் அதுபோன்று நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத வகையில் முதல் முறையாக 4 ஆயிரம் விரிவுரையாளர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்தப்பட்டு நியமிக்கப்பட இருக்கின்றனர். தற்போது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்கள் பணியிடத்தில் நிரந்தர விரிவுரையாளர்கள் நியமிக்கப்படும் வரை பணியில் இருந்து நீக்கப்பட மாட்டார்கள்.
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் விரிவுரையாளர் தேர்வில் வெற்றி பெறும் நபர்களுக்கு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றிய ஆண்டுகளின் அடிப்படையில் நேர்முகத் தேர்வில் அதிகபட்சமாக 15 மதிப்பெண்கள் வரை மதிப்பெண் வழங்கப்படும்.
கடந்த காலங்களில் பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிமுறைகளை பின்பற்றாமல் கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அவர்களில் தற்போது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளராக பணியில் உள்ள 5 ஆயிரத்து 303 பேரில் 3ஆயிரத்து 390 பேர் தகுதியுள்ளவர்களாக பணியாற்றி வருகின்றனர். 1,900 பேர் தகுதியில்லாமல் இருக்கின்றனர். இவர்கள் தங்களை தகுதிப்படுத்திக் கொண்டால் மட்டுமே பணியில் தொடர முடியும்.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 4 ஆயிரம் நிரந்தர விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டாலும் மீதமுள்ள ஆயிரத்து 875 காலி விரிவுரையாளர் இடங்களில் கவுரவ விரிவுரையாளர்கள் முன்னுரிமை அடிப்படையில் மண்டல இயக்குநர் மூலம் நியமிக்கப்படுவார்கள். தனியார் பல்கலைக்கழகங்களை தொடங்குவதற்கு 100 ஏக்கர் நிலம் மற்றும் 50 கோடி ரூபாய் நிதி செலுத்தியவர்களுக்கு அனுமதி வழங்கி வருகிறோம்” என்றார்.
இதையும் படிங்க: அதிமுக விவகாரத்தில் சபாநாயகர் என்ன முடிவு எடுக்கப்போகிறார்?