சென்னை தண்டையார்பேட்டை மண்டலத்திற்கு உள்பட்ட பகுதிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து களப்பணியாளர்களிடம் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் ஆலோசனை மேற்கொண்டார்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அவர் , “தண்டையார்பேட்டை மண்டலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த நான்காயிரத்து 291 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், மருத்துவமனையில், ஆயிரத்து 990 பேர் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
தண்டையார்பேட்டை மண்டலத்தில் தற்போது வரை 800 முதல் 1000 பேர்வரை தினமும் கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்படுகின்றனர். சென்னையில் மொத்தமாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கணினி முன் அமர்ந்துகொண்டு அறிக்கை அரசியல் செய்கிறார். ஆனால் முதலமைச்சர்களும், அமைச்சர்களும் களத்தில் இறங்கி பணி செய்து கொண்டிருக்கின்றோம்.
கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நாளை, முதலமைச்சர் அமைச்சர் குழுவினை அமைத்தால், அதை முன்பே தெரிந்து கொண்டு இன்று அறிக்கை விட்டு, தான் கூறியதாலேயே முதலமைச்சர் அத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டார் என்று அறிக்கை விடுகிறார்.
திமுகவுடன் இணைந்து கரோனா தடுப்புகளை பணியாற்றுவதில் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் திமுகவினர் தங்களுடன் இணைந்து களத்தில் பணியாற்ற மறுக்கின்றனர்.
தாராவி மக்களுடன் தமிழ்நாட்டை ஒப்பிடுவதற்கு பதிலாக, டெல்லி போன்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மாநில அரசு சிறப்பாக பணியாற்றியுள்ளது தெரியும்.
ஊரடங்கு அமல்படுத்துவதின் மூலம் கரோனா கட்டுக்குள் வரும் என்ற முதலமைச்சரின் வியூகம் வெற்றி அடைந்துள்ளது” எனக் கூறினார்.