சென்னை தண்டையார்பேட்டை மண்டலத்திற்கு உள்பட்ட பகுதிகளில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் மக்களுக்கு தேவையான மளிகை பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை அளித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ கடந்த சில நாள்களில் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைவிட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தண்டையார்பேட்டை மண்டலத்தில் இன்று கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7ஆயிரத்து 252ஆக அதிகரித்துள்ளது.
சித்த மருத்துவத்தையும் அலோபதி மருத்துவத்தையும் ஒன்றாகத்தான் அரசு பார்க்கிறது. இரண்டு மருத்துவர்களும் இணைந்துதான் மக்களுக்கு சிகிச்சை செய்து வருகின்றனர்.
திமுக தலைவர் ஸ்டாலின் மொத்த தொற்று பாதிப்புக்குள்ளான எண்ணிக்கையை கூறிக்கொண்டிருக்கிறார். ஆனால் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையை விட்டுவிடுகிறார். மொத்த தொற்று எண்ணிக்கையை கூறினால்தான் மக்கள் மத்தியில் பீதியை கிளப்பமுடியும் என்று அவர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்.
கரோனா காலத்தில் மக்களுக்கு உதவி செய்தோம். மக்கள் உயிரை காப்பாற்றினோம். இதனால் நாங்கள் பரப்புரை மேற்கொள்ளாமலேயே மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள். ஆனால் வீட்டிற்குள் இருந்துகொண்டு கணினி மூலம் பரப்புரை செய்து கொண்டிருக்கிறார் ஸ்டாலின்” என்றார்.