சென்னை எத்திராஜ் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் அகரமுதலித் திட்டத்தில் சொற்கோவை உருவாக்குவதற்கான கருத்தரங்கை தமிழ் ஆட்சிமொழி மற்றும் பண்பாடு தொழில் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்துகொண்டு தொடங்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சர்வதேச தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் நடத்தும் உலகத் தமிழ் மாநாடு தமிழ்நாட்டில் 2020 -21ஆம் ஆண்டில் நடத்தப்படும். இந்த மாநாடு ஏற்கனவே ஆறு நாடுகளில் நடத்தப்பட்டுள்ளது. தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உலகத் தமிழ் மாநாடு நடத்தப்படும்.
தமிழ்நாடு ஆளுநர் பல்கலைக்கழகங்களுக்கு சென்று பட்டமளிப்பு விழாவில் மட்டும் கலந்துகொள்ளாமல் அங்கு நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொண்டு பல்வேறு ஆக்கபூர்வமான ஆலோசனைகளை அளித்துவருகிறார். அதன் நீட்சியாகத்தான் ஆளுநரின் செயலர் ஆய்வு செய்தார். அவர் ஆய்வு செய்ததில் எந்த தவறும் இருப்பதாக நான் கருதவில்லை.
ஆளுநரின் செயலர் ராஜகோபால் தமிழுக்காக பல்வேறு பணிகளை ஆற்றியுள்ளார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளிலும் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. எனவே அவர் ஆய்வு செய்வதால் அந்த கல்லூரிக்கு பல நன்மைகள் கிடைக்கும் என நான் நம்புகிறேன்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வேண்டும் என அழைப்பதற்காக சென்றுள்ளார். குறைந்தது ஆயிரம் தொழிலதிபர்களை சந்தித்து முதலீடுகளை கொண்டுவருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. முதலமைச்சரின் பயணத்திட்டம் அனைத்தும் வெளிப்படையாக அளிக்கப்பட்டுள்ளது.
இதனை விமர்சனம் செய்வதை நான் தரம் தாழ்ந்த விமர்சனமாக பார்க்கிறேன். முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தால் மூன்றாவது சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு தமிழ்நாட்டில் 2020-21ஆம் ஆண்டில் நடைபெறும்போது வெளிநாடு வாழ் தமிழர்கள் அதிகளவில் முதலீடுகள் செய்திருப்பார்கள் என்பதை அனைவரும் பார்க்க போகிறோம்" என்றார்.