தமிழ்நாட்டில் வரும் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் திருநின்றவூர் நடுகுத்தகை பகுதியில் மாவட்ட கவுன்சிலர், ஊராட்சி பதவிகளுக்கு போட்டியிடும் அதிமுக வேடப்பாளர்களை ஆதரித்து தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு அப்பகுதி மக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”குடியுரிமை திருத்த சட்டத்தை அதிமுக கொள்கை முடிவின் அடிப்படையில்தான் ஆதரித்து வாக்களித்தது. யாருடைய நிர்பந்தமும் இல்லை. இதனால் எந்த மதத்தவரும் பாதிப்படைய மாட்டார்கள். ஈழ தமிழர்கள் விவகாரத்தில் அவர்கள் இங்கேயே இருப்பது எங்கள் நோக்கமல்ல. அவர்கள் சொந்த நாட்டிற்கு செல்ல வேண்டும். அவர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம்” என்றார்.
இதையும் படிங்க: அரசின் அலட்சியத்தால் கையை இழந்து உயிருக்குப் போராடும் பள்ளி மாணவர்!