தமிழ்நாட்டில் கரோனா ஊரடங்கால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து, பல்வேறு தரப்பினரும் பொதுமக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். இதன் ஒருபகுதியாக ஆவடி தொகுதிக்குட்பட்ட பட்டாபிராம் ஜீவ ஒளி திருச்சபையில் பொதுமக்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை பயனாளிகளுக்கு வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பாண்டியராஜன், 'ஊரடங்கில் தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதற்கு பொதுமக்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். புதிய சட்டங்களுடன் ஊரடங்கு நீடிக்க வாய்ப்புள்ளதாகவும், முன்னதாக அளிக்கப்பட்டுள்ள மூன்று விதமான தளர்வுகள் மேலும் மறுவரையறை செய்யப்பட வாய்ப்புள்ளது. எனினும், தமிழ்நாடு முழுமையான இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டுமென விரும்புகின்றேன்.
கரோனா ஊரடங்கு காலங்களில் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்புகளை ஈடுசெய்யும் பொருட்டு, பிரதமர் அறிவித்துள்ள 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள அறிவிப்புகள் மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள சிறு, குறு தொழிலாளர்களுக்கு இழப்பீடாக மாநில அரசு கேட்டிருந்த ஒரு லட்சம் கோடி ரூபாயினை மத்திய அரசு இந்த 20 லட்சம் கோடி ரூபாயிலிருந்து அறிவிக்கலாம் என மக்கள் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.
நேற்றைய தினம் மத்திய நிதியமைச்சரின் செய்தியாளர் சந்திப்பு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இவை மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறதா என்பதைப் பொறுத்திருந்தே காணவேண்டும்' என்றார்.
மேலும் பேசிய அமைச்சர், ஜூன் மாதம் ஒன்றாம் நாள் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நிச்சயமாக தேர்வுகள் நடத்தப்படும் எனவும், திமுக தலைவர் ஸ்டாலின் மாணவர்களின் மனதில் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறார் எனவும் குற்றம்சாட்டினார்.
சுழற்சி முறையில் கலை அறிவியல் கல்லூரியில் வகுப்புகள் நடைபெறுவது சிறந்தமுறை எனவும், அதனை மத்திய அரசு தமிழ்நாட்டில் மாற்றமாட்டார்கள் என நம்புவதாகவும், அப்படி ஏதேனும் மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டால் தமிழ்நாடு முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார் எனவும் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'திட்டங்கள் அமல்படுத்தப்பட்டாலே சாதகங்கள் என்னவென்று தெரியும்'