சென்னை: என்.எல்.சி நிறுவனத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 300 தொழிலாளர்களில் ஒரு தமிழர் கூட தேர்வு செய்யப்படாதது தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அருண்மொழி தேவன் கேள்வி எழுப்பினார்.
மேலும், என்எல்சி நிறுவனத்திற்கு மீண்டும் நிலம் எடுக்கவுள்ளதாகவும், இதற்கு முன்பாக நிலம் கொடுத்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு தருவதாக உறுதி அளித்துவிட்டு, இன்று வரை வேலை தரவில்லை என்று திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, தமிழக வாழ்வரிமை கட்சி போன்ற அரசியல் கட்சிகளைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் அரசின் கவனத்தை ஈர்த்துப் பேசினர்.
இதற்கு பதில் அளித்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், “என்.எல்.சி நிறுவனம் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனமாக இயங்கி வருகிறது. ஒன்றிய அரசின் Recruitment policy மூலமாக தான் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சிக்கு நிலங்கள் கொடுத்தவர்களுக்கு 50 ஆண்டுகளுக்கும் மேலாக இதுவரை பணிகள் வழங்கப்படவில்லை. இது வருத்தமும் வேதனையும் அளிக்கிறது” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “இது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு சென்று, அவரின் அலுலகத்தில் இருந்து என்.எல்.சி நிறுவனத்திற்கு கடிதம் மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டப்பேரவை முடிந்தவுடன் தொழில்துறை அமைச்சர், செயலாளர், வேளாண் துறை அமைச்சர் மற்றும் தொழிலாளர் நலத் துறை சார்ந்த செயலாளர் ஆகியோர் என்.எல்.சி நிறுவன உயர் அலுவலர்களை சென்னையில் உடனடியாக அழைத்து அவர்களுடன் ஆலோனை நடத்தப்படும்” என்று தெரிவித்தார்.
மேலும், இது குறித்து கடலூரில் நிலம், வீடு இழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் மட்டுமில்லாமல், வேலைவாய்ப்பும் வழங்க முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்து நிச்சயமாக வேலைவாய்ப்பை ஏற்படுத்துவோம் என்றும் அமைச்சர் கூறினார்.