சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் கூட்டுத்தொடரில், வேளாண் அறிக்கை விவாதத்திற்கான பதிலுரையை இன்று சட்டப்பேரவையில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார்.
சட்டப்பேரவையில் பேசிய அவர், ''அனைத்து கட்சிகளும் பாராட்டும் நிதி நிலை அறிக்கையாக இந்த வேளாண் நிதி நிலை அறிக்கை உள்ளது என்றும்; பருவம் தவறிய மழையால் பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு 20,000 நிதி உதவி வழங்கப்படும்'' என அறிவித்தார்.
திமுக அரசு பொறுபேற்றவுடன் வேளாண் நிதி நிலை அறிக்கை மூலம் 70 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர் என்றும்; கடந்த ஆண்டை விட உணவு தானியங்களின் மொத்த சாகுபடி பரப்பு, உணவு தானிய உற்பத்தி, கரும்பு சாகுபடி எனப் பல்வேறு பயன்கள் அதிகரித்துள்ளன. எனவே, அதன் புள்ளி விவரங்களுடன் அனைத்து விவசாயிகளுக்கும் பயன் தரக்கூடிய வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தபட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, 47 ஆண்டுகளில் நிகழாத சாதனையாக குறுவை நெல் சாகுபடி 5,33,000 ஏக்கர் சாகுபடியும், கடந்த ஆண்டைவிட மொத்த சாகுபடி பரப்பு கூடுதலாக ஒரு லட்சத்து 93 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவும், உணவு தானிய உற்பத்தி 11 லட்சத்து 73 ஆயிரம் மெட்ரிக் டன்னும், கரும்பு சாகுபடி பரப்பு 55 ஆயிரம் ஹெக்டேரும், அதிகரித்துள்ளதாக அதிகரிப்புப் பட்டியலை சட்டப்பேரவையில் குறிப்பிட்டார்.
திமுக கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில், தற்போது கரும்பு டன் ஒன்றுக்கு 195 ரூபாய் உயர்த்தி 3010 ரூபாயாக வழங்கப்பட்டு வருவதாகவும்; அடுத்த 3 ஆண்டுகளில் கரும்பு டன் ஒன்றுக்கு 4ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும்; கூடுதலாக குடும்பத்திற்கு ஓர் பலா, மா கன்றுகள் என 10 லட்சம் கன்றுகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார், வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்.
மேலும் பல்வேறு திட்டங்களையும் அதன் பயன்களையும் தொடர்ந்து சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தினார், வேளாண்துறை அமைச்சர். பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் 6.7 லட்சம் விவசாயிகள் பயன்பெற்று உள்ளனர் என்றும்; 2021 - 2022ஆம் ஆண்டில் 6,67,000 விவசாயிகள் பயிர் காப்பீட்டு இழப்பீடு மற்றும் அங்கக வேளாண்மைக்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது என்று அறிவித்தார்.
இத்திட்டத்திற்கு வேளாண் பட்ஜெட்டுக்கு விவசாயிகள், தொழிலதிபர்கள், வெளிநாட்டினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்தவர்கள் போன்ற அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டுகளை பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக முதலமைச்சர் 70 வயது இளைஞராக ஆக்ஷன்(Action)முதலமைச்சராக செயல்பட்டு வருகிறார் என புகழாரம் சாட்டி சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகள் குறித்தும், ஆலோசனைகளையும் நிச்சயம் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழான அறிவிப்புகளில் 27 சதவீதம் மட்டுமே நிறைவேற்றம் - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்