சென்னை: வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, ஓட்டேரி ஏரியில் தமிழ்நாடு ஈர நிலங்கள் இயக்கம் தொடக்கவிழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், தமிழக குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கூறுகையில், “தமிழக முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு ஈர நிலங்கள் இயக்கம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தமிழக முதல்வர் பசுமை தமிழகம் என்னும் இயக்கத்தை வண்டலூர் உயிரியல் பூங்காவில் துவக்கி வைத்திருந்தார். இன்று தமிழ்நாடு ஈர நிலங்கள் இயக்கத்தை துவங்கியிருக்கிறோம்.
இது ஒரு முக்கியமான இயக்கம் இதுபோன்ற இயக்கங்களை எந்த அரசும் துவங்கியதே கிடையாது. திமுக ஆட்சி அமைந்த உடன் தமிழக முதலமைச்சர் இதுபோன்ற பொறுப்பு வாய்ந்த பணிகளை துவங்கியிருக்கிறார். ஈர நிலங்களை பேணி பாதுகாக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் கிட்டத்தட்ட 5 வருடங்களில் குறைந்தபட்சம் 100 ஈர நிலங்களை கண்டு அதை பேணி பாதுகாக்க வேண்டும்.
ராம்சார் தலங்கள் எனப்படும் ஈர நிலங்களில் 14 ராம்சார் தலங்களை கண்டெடுத்துள்ளோம். இந்தியாவிலேயே தமிழகம் தான் முதன்மை மாநிலமாக இருக்கின்றது. இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 75 ராம்சார் தளங்கள் இருக்கின்றன, அதில் தமிழ்நாட்டில் உள்ள 14 இடத்தை முதலில் கண்டறிந்து அதையும் பாதுகாத்து கொண்டிருக்கிறோம். இதுபோன்று பல முக்கியமான பணிகளை வனத்துறை சார்பாக செய்ய உள்ளோம்.
இன்று அரிக்கொம்பன் யானையை மூன்று கும்கி யானை உதவிகளுடன் 200க்கும் மேற்பட்ட வனத்துறை அதிகாரிகளை ஈடுபடுத்தி ஒட்டுமொத்தமாக இணைந்து பிடித்து இருக்கிறோம். அதை எங்கு கொண்டு செல்லலாம் என்பதை இன்னும் வனத்துறை சார்பில் முடிவு எடுக்கவில்லை. யானை எங்கு இருந்தால் அதன் வாழ்வியல் பாதிக்காமல் அதற்கு உணர்ந்த இடமாக பார்த்து முடிவு எடுத்து அங்கு யானையை விடுவோம்.
மக்களாகிய நமக்கு தான் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா எல்லாம் யானைக்கு அது கிடையாது யானையைப் பொறுத்தவரை அது காடு. அது தமிழக காடு ஆக இருந்தாலும் சரி கேரள காடு ஆக இருந்தாலும் சரி கர்நாடகா காடு ஆக இருந்தாலும் சரி யானையைப் பொறுத்தவரை அது வெறும் காடு. நமக்கு எல்லைகள் தெரியும் யானைகளுக்கு எல்லைகள் தெரியாது. அதை எங்கு விட்டாலும் எந்த வனப் பகுதிக்கு வேணாலும் மாறி வரும் போகும்.
அதை யார் பிடிக்கிறார்களோ அந்த பகுதியில் விடுவார்கள். அது போகுமா இல்லையா என்பதை நாம் சொல்ல முடியாது. எந்த இடத்திற்கு வந்து பொதுமக்களுக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருந்தால் தான் அதை சார்ந்த அதிகாரிகள் பிடித்து அதை மீண்டும் அவர்களது மாநில எல்லைக்குட்பட்ட பகுதியில் விடுவார்கள்.
கேரளா உயர்நீதிமன்ற உத்தரவுபடி அங்கு இருக்கக்கூடிய யானை பிரியர்கள் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்கள். பிடிபட்ட யானையை முகாமில் வைக்கக்கூடாது கேரளா வனத்துறையில் விட வேண்டும் என கேரளாவின் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டார்கள். இப்போது தமிழ்நாட்டுக்கு உள்ளே வந்துவிட்டது தமிழ்நாட்டுக்குள்ளே வந்ததனால் நாமும் காட்டுப் பகுதிகளில் விடப்போகிறோம்.
மீண்டும் ஏதாவது பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் வந்தால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எப்படி இருந்தாலும் மக்களுக்கு எந்த அச்சுறுத்தலும் வரக்கூடாது யாரும் அதில் பாதிக்க கூடாது என்பதில் வனத்துறையும் தமிழக அரசும் உறுதியாக இருக்கிறது. யானையின் தும்பிக்கை காயம் அடைந்து இருப்பதால் நிச்சயம் அதற்கு சிகிச்சை அளித்த பிறகு வனப்பகுதிக்குள் விடப்படும். யானைக்கு மிகவும் மோசமான உடல்நிலை எல்லாம் இல்லை அதற்கு சிகிச்சை அளித்து மீண்டும் காட்டுக்குள் விடுவோம்” என வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆக்ரோஷமான அரிக்கொம்பன்...குளிர்வித்த தீயணைப்பு துறையினர்...