சென்னை: தமிழ்நாடு அமைச்சரவை மாற்றத்தில் பால்வளத்துறை அமைச்சராக மனோ தங்கராஜ் பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமையகத்தில் அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் பால்வளத்துறையில் பசுமை புரட்சியை ஏற்படுத்தி, ஆவின் சிறந்து விளங்கத்துறையில் உள்ள பிரச்னைகள், சவால்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அந்த ஆய்வுக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ், "ஆவினில் தற்போது 34 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து மக்களுக்கு தரமான, விலை மலிவான பொருளாக வழங்கப்பட்டு வருகிறது. ஆவின் பொதுத்துறை நிறுவனமாக இருந்தாலும் வியாபாரம் சம்பந்தப்பட்ட, பொதுமக்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டது. ஆவினில் ஏற்கனவே நிறைய தயாரிப்புகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மிகக் குறுகிய காலம் இருக்கக்கூடிய பொருட்களின் தரத்தை உயர்த்துவது, கூடுதல் தரமான பொருட்களைக் கொண்டு வருவது போன்றவற்றை தீவிரமாக ஆலோசித்து முடிவுகளை எடுப்போம். இந்த வாரம் சேலத்தில் உள்ள தயாரிப்பு ஆலையை பார்வையிட உள்ளேன். பொதுமக்கள் மத்தியில் தேவைக்குரிய பொருட்களை உற்பத்தி செய்வோம். கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்ட செறிவூட்டப்பட்ட பசும்பால் மக்களிடத்தில் ஓரளவு வரவேற்பு பெற்றுள்ளது. அதன் விற்பனையை மேலும் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம்.
ஆவினில் மக்களின் தேவைக்கேற்ப உற்பத்தியை பெருக்குவதோடு, நிறைய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தவும், ஏற்கனவே உள்ள தயாரிப்புகளை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம். ஆவினில் எந்தெந்த இடங்களில் உடனடியாக ஆட்கள் தேவைப்படுகிறதோ அதனை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். ஆவின் என்றால் தரம் என்று கூறப்படும் அளவிற்கு இன்னும் கூடுதலாக தரத்தை உயர்த்துவோம்.
ஆவின் பொருள்களை விற்பனையை அதிகரிக்கவும், உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் விலை அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆவின் தயாரிப்புகள் உடல் நலத்திற்கான தயாரிப்புகளாகவும் இருக்கும் அளவிற்கு மேம்படுத்த உள்ளோம். சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளை உடனடியாக நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: கடலூரில் வீட்டுக் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 3 பேர் பலி