சென்னை: ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில், இளைய தலைமுறையினரிடையே புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், நாட்டில் முதல் முறையாக G20 Startup20X என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ், "திராவிட மாடலை காலாவதி (Expire) பண்ண வேண்டியது என்பது, ஆளுநர் ஆர்.என்.ரவியின் திட்டம். அதனால் தான் அவர் அப்படி பேசுகிறார். திராவிட மாடலைப் பற்றி ஒரு புரிதல் வேண்டும். இன்றைக்கு நாங்கள் ஏன் திராவிட மாடல் என்று சொல்கிறோம் என்று சொன்னால், அது எங்களுடைய இனத்தின் குறியீடு என்பது ஒரு புறம். ஆனால், இந்திய துணைக் கண்டத்தில் கல்வி மறுக்கப்பட்டு, வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டு அனைத்தும் மறுக்கப்பட்டு ஒரு வர்க்க சமூகம் கட்டமைக்கப்பட்டது.
சாதியின் அடிப்படையில் அந்த கட்டமைப்புக்கு எதிரான போராட்டம் என்பது திராவிட இயக்கங்களின் தலைவர்களால் முன்னெடுக்கப்பட்டது. எனவே, சமூக நீதியை எல்லோரையும் உள்ளடக்கி இருக்கக் கூடிய திட்டங்களை உள்ளடக்கி இருக்கக் கூடிய அந்த மாடலின் பெயர்தான் திராவிட மாடல். இது ஒரு மேஜிக்கல் நேம் (Name - பெயர்) அல்ல.
இது பெரிய மாந்திரீக வார்த்தை ஒன்றும் இல்லை. இது எளிமையாக, எல்லோரும் புரிந்து கொள்ளக் கூடிய ஒரு அற்புதமான வார்த்தை. அனைத்து மக்களையும் உள்ளடக்கி இருக்கக் கூடிய அனைத்து மக்களுக்கும் அரசின் பயன் கிடைக்கக் கூடிய திட்டங்களை வகுத்து அளிக்கக் கூடிய ஒரு மாடல், திராவிட மாடல்.
இந்த மாடல் உடைய வெற்றி என்பதற்கு ஒரு உதாரணத்தை நான் சொல்கிறேன். இன்றைக்கு உயர் கல்வியில் பெண்களுடைய பங்களிப்பு என்பது, இந்தியாவினுடைய ரேஷியோ என்பது 24.1 சதவீதம் சராசரி. ஆனால், நமது மாநிலத்தினுடைய வளர்ச்சி என்பது 72 சதவீதம். இந்த மாடல் எக்ஸ்பைரா அல்லது இருக்கிறதா? இன்னும் சமூகத்தில் எவ்வளவு ஏற்றத்தாழ்வுகள் இருக்கிறது?
இந்த அரசியல் பேச்சுகளை எல்லாம் ஆளுநர்கள் கூடாது. பட்ஜெட்டில் ஒன்றை அறிவிக்கிறார் என்றால், பட்ஜெட் கூட்டத்தில் பேசுகிறார். திராவிட இயக்க அரசியல், திராவிட இயக்க கொள்கை, திராவிட மாடல் ஆட்சியினுடைய அடிப்படையில் தீட்டப்பட்ட திட்டங்களை தொகுத்து பேசிய ஆளுநர், எப்படி கூச்சம் இல்லாமல் வெளித் தளத்தில் வந்து அதை விமர்சிக்கிறார் என்று எனக்கு தெரியாது. அவரிடமே கேளுங்கள். ஆளுநருக்கு நிச்சயமாக புரிதல் இல்லை.
இந்தியாவின் பன்முகத் தன்மையை அறியாதவர்கள், இந்திய அரசியல் பேச முடியாது. இந்தியாவினுடைய பன்முகத் தன்மை என்பது, இந்தியாவில் பல இனத்தவர்கள் வாழ்கிறார்கள். திராவிடர்கள் பெரும்பான்மையராக இருக்கிறார்கள். ஆரியர்கள் வாழ்கிறார்கள். மங்கோலியர்கள் வாழ்கிறார்கள். பல இனத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்கிறார்கள்.
எனவே, பல இனங்களை உள்ளடக்கிய நாடு இந்த நாடு. இவர்கள் ஏற்றத்தாழ்வு சமூகத்தை கட்டமைத்தாலும் பல சாதிகளை உள்ளடக்கி இருக்கக் கூடிய நாடு இந்த நாடு. பல மதங்களை உள்வாங்கி, அவர்கள் எல்லாம் ஏற்றுக் கொண்டு, அவர்கள் வழிபாட்டு முறைகளை, அந்த சமயச் சடங்குகளை எல்லாம் உள்வாங்கி இருக்கக் கூடிய நாடு. எனவே, இது பன்முகத் தன்மை கொண்ட நாடு.
இந்த பன்முகத் தன்மையில் அவருடைய சுய அடையாளத்தை விளக்க வேண்டிய தேவையில்லை. திராவிடம் என்பது இந்திய நாட்டிற்குள் இருந்தாலும், எங்களுடைய சுய அடையாளங்களை நாங்கள் விட்டுக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. திராவிடம் என்பது எல்லோரும் சமம் என்கிற கொள்கை. அந்த கொள்கையை நாங்கள் யாரிடம் விட்டுக் கொடுக்க வேண்டும்?
எதற்கு அதைப் பற்றி நாங்கள் அச்சப்பட வேண்டும்? இதை உள்வாங்காதவர்களுக்கு இந்தியா பன்முகத் தன்மையை புரிந்து கொள்ளாதவர்கள் சனாதனம் பேசுகிறவர்கள். மற்றவர்களை ஏளனமாக பார்க்கிறவர்கள். சாதிய கோட்பாடுகளை ஏற்றுக் கொள்கிறவர்களால் இந்த புரிதல் எந்த சூழ்நிலையிலும் வராது.
அதன் வெளிப்படைதான் நாம் அங்குமிங்கும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த ஆளுநர் எதைத் தான் சரியாகச் சொன்னார்? எதை சொன்னாலும் அவர் மறுக்கத்தான் செய்வார். ஒரு கவர்மெண்ட் செலவுகளை எந்த வகையில் சுருக்க முடியும் என்று பார்ப்பது ஒரு நல்ல அணுகுமுறை. பொருளாதார சிக்கல் இருக்கிறது என்று சொன்னால், முதலில் செலவினங்களை குறைக்க வேண்டும்.
தேவையில்லாத செலவினங்கள் அல்லது கடந்த காலங்களில் தேவைக்கு மீறி செலவு செய்யப்பட்டவற்றை குறைப்பதற்கான நடவடிக்கையை அந்த துறை எடுக்கின்றதே தவிர, இது வேறொன்றுமில்லை. ஆனால் அது நடக்கவில்லை என்று ஏன் மறுக்க வேண்டும்?
ஆன்லைன் ரம்மி, ஆன்லைன் மோசடிகளை கட்டுப்படுத்த தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடுமையான முயற்சிகளை எடுத்து வருகிறோம். மத்திய அரசும் இதே நோக்கத்துடன் வந்தால்தான் ஒன்றுபட்டு மக்கள் பிரச்னைகளை தயக்கம் இல்லாமல் செய்ய வேண்டும். அவர்கள் (மத்திய அரசு) செய்வார்களா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்" என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரி நிறுவனர் பி.ஸ்ரீராம், கல்லூரி முதல்வர் ரமேஷ், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பல்வேறு தொழில் துறையைச் சேர்ந்த தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: 'ஆளுநர் ரவிக்கு அரசியலமைப்புச் சட்டம் தெரியவில்லை' - டி.கே.எஸ் இளங்கோவன்!