சென்னை: 'சிதம்பரம் குழந்தை திருமணம் விவகாரம் ஒரு குழந்தையின் எதிர்கால விஷயம் தொடர்ந்து பேசினால் நன்றாக இருக்காது என்றும் எனவே, இதற்கு முற்றுப்புள்ளி வைப்போம்' என்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி 169 வார்டில் அமைச்சர் சுப்பிரமணியன் 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 'அண்ணா சாலை' பூங்காவிற்கு இன்று (ஜூன் 6) அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து, எல்சிஜி சாலையில் 14.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பல்நோக்கு கட்டடம் மற்றும் நியாய விலை அங்காடியையும் தொடக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'சென்னை சைதாப்பேட்டை அண்ணா சலையில் மெட்ரோ பணி நடக்கும் நிலையில், காலியிடங்களில் மாநகராட்சி சார்பில் 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பூங்கா தொடங்குவதற்கான பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என்றார். அதேபோல, 169 வது எல்.சி.ஜி வார்டில் நியாயவிலை கடை அமைக்க வேண்டும் என்று நீண்ட கால கோரிக்கையாக இருந்த நிலையில், சாலையில் 14.5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடையும், வேளச்சேரி - சின்னமலை இணைப்பு சாலையில் 16 லட்சம் ரூபாய் மதிப்பில் மேலும் ஒரு புதிய ரேஷன் கடையும் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.
முற்றுப்புள்ளி வைக்கவேண்டியது: சிதம்பரம் குழந்தை திருமணம் தொடர்பான வீடியோ வெளியான விவகாரம் (Chidambaram Child Marriage Issue) குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'இது ஒரு குழந்தையின் எதிர்கால விஷயம் என்றும், தொடர்ந்து அது குறித்து பேசினால், நன்றாக இருக்காது என்றும் தெரிவித்தார். இதனை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் தெரியாமல் பேசி வருவதாக குற்றம்சாட்டிய அவர், இது குறித்து விமர்சனம் செய்யாமல் இத்தோடு அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: சிதம்பரம் சிறுமிகளுக்கு இருவிரல் கன்னித்தன்மை சோதனை? - ஆளுநர் புகாருக்கு டிஜிபி விளக்கம்!
மேலும், மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு, மத்திய அரசு 15 விழுக்காடு நடத்துவதற்கு அறிவிப்பு வெளியிடப்படுவதைத் தொடர்ந்து, அதற்கு அடுத்தநாளில் தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு அறிவிக்கப்படும் எனக் கூறிய அவர், தேசிய தரவரிசை பட்டியலில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி 11 வது இடம் பிடித்தது மகிழ்ச்சி எனத் தெரிவித்தார். கடந்த முறை 16 வது இடத்திலிருந்து தற்போது 11 வது இடத்திற்கு முன்னேறி இருப்பதாகவும், இந்தியாவிலேயே முதல் 10 இடங்களில் எந்த அரசு கல்லூரியும் இடம்பெறாத நிலையில், பதினோராவது இடத்தில் ராஜீவ் காந்தி மருத்துவமனை வந்துள்ளதாக அவர் கூறினார்.
மத்திய அமைச்சர்களுடன் சந்திப்பு: தர்மபுரி, திருச்சி, சென்னை ஆகிய மூன்று மருத்துவக்கல்லூரிகள் விவகாரத்தில் இன்று நல்ல முடிவு வரும் என்று எதிர்பார்ப்பதாகவும், இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்த ஆண்டு மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் எவ்வித பிரச்னையும் இருக்காது எனவும் கூறிய அவர், விரைவில் மத்திய சுகாதாரத்துறை மற்றும் ஆயுஷ் அமைச்சர்களை சந்தித்து பேச உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் குறித்து எதிர்க்கட்சி தலைவர்களின் அறிக்கை குறித்த கேள்விக்கு, தமிழகத்தின் வளர்ச்சி குறித்த அக்கறை இல்லாதவர்கள், தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்து பெரிய அளவில் கவலைப்படாதவர்கள் என்று அவர் கடுமையாக சாடியுள்ளார். தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்து யோசிக்கவே தெரியாதவர்கள் இவ்வாறு சொல்வது விமர்சனம் ஆகும் என்று கூறிய அவர், இது ஆளுநர் உள்ளிட்ட எல்லோருக்கும் பொருந்தும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சிதம்பரம் குழந்தை திருமணம் குறித்து உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும்: வழக்கறிஞர் சந்திரசேகர்