சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பில், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம் மற்றும் பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா 2.0 திட்டத்தினை ஒன்றிணைத்து புதுப்பித்த திட்டத்தினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பயனாளிகளுக்கு மகப்பேறு நிதியுதவியை வழங்கி துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழ்நாட்டில் முதலமைச்சராக கருணாநிதி இருந்தபோது மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம், முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டம், உள்ளிட்ட திட்டங்களை தொடங்கினார். அது படிப்படியாக இந்தியா முழுவதும் கர்ப்பிணி பெண்களுக்கான திட்டமாக மாறி இருக்கிறது.
2006-ஆம் ஆண்டில் ரூ.6 ஆயிரமாக இருந்த உதவித்தொகை 2012-ஆம் ஆண்டில் ரூ.12 ஆயிரமாக ஆக மாற்றப்பட்டது. இப்பொழுது ரூ.18 ஆயிரமாக இருக்கிறது. 2018-ஆம் ஆண்டு முதல் ஒன்றிய அரசும் தன் பங்களிப்பாக ரூபாய் 3 ஆயிரம் கொடுப்பதாக அறிவிப்பு வெளியானது. கர்ப்பிணி தாய்மார்களுக்கு மொத்தம் 18 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. அதில் 14 ஆயிரம் ரூபாய் பணமாகவும், 4 ஆயிரம் ரூபாய் அளவில் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படுகிறது. ஒன்றிய அரசிற்கான நிதியுதவி 3 ஆயிரம் ரூபாய் வருவதில் தாமதம் ஏற்பட்டாலும் தமிழ்நாடு அரசின் நிதியுதவி 15 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கு ஏற்ப மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கர்ப்பம் தரித்த மூன்றாவது மாதம் 2 ஆயிரம் ரூபாய், நான்காவது மாதம் 2 ஆயிரம் ரூபாய் , குழந்தை பிறந்தவுடன் 4 ஆயிரம் ரூபாய் குழந்தை பிறந்து மூன்று மாதம் கழித்து 4 ஆயிரம் ரூபாய், ஒன்பது மாதம் கழித்து 2 ஆயிரம் ரூபாய் என 14 ஆயிரம் மற்றும் இரண்டு ஊட்டச்சத்து பெட்டகங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த இரு திட்டங்களும் ஒன்று சேர்ந்த போது பயனாளிகள் பட்டியல் தயாரிப்பில் குழப்பம் ஏற்பட்டது. கடந்த ஆண்டுகளில் முதல் தவணை போய் சேர்வதில் சிறிய தாமதம் ஏற்பட்டது. முதலமைச்சரின் வழிகாட்டுதல் படி இது குறித்து ஒன்றிய அரசுடன் தொடர்ந்து பேசப்பட்டது. டெல்லியில் இது தொடர்பாக பல்வேறு கூட்டங்கள் நடத்தப்பட்டது. ஏழு முதல் எட்டு முறை பொது சுகாதாரத்துறை இயக்குநர் நேரில் சென்று பேசினார்.
முதலமைச்சரின் வழிகாட்டுதல் படி இந்த திட்டம் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ஒரு சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு பயனாளிகளுக்கு சுலபமாக சென்று சேரும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. கர்ப்பம் தரித்த நான்காவது மாதம் 4 ஆயிரம் ரூபாய், குழந்தை பிறந்தவுடன் 4 ஆயிரம் ரூபாய் குழந்தை பிறந்து 4 மாதம் கழித்து 6 ஆயிரம் ரூபாய் மற்றும் இரண்டு ஊட்டசத்து பெட்டகங்களும் வழங்கப்பட உள்ளது.
இந்த திட்டம் மூலம் பயன் பெற தகுதி உள்ளவர்கள் விண்ணப்பித்து காத்திருக்கும் நிலை உள்ளது. அவர்களின் பட்டியல் கண்டறியப்பட்டு படிப்படியாக இந்த தொகை வழங்கப்பட உள்ளது. தற்பொழுது 1 லட்சத்து 6 ஆயிரத்து 766 பேர் இந்த மாற்றி அமைக்கப்பட்ட திட்டம் மூலம் பயன் பெற உள்ளனர். இதற்காக 44 கோடியே 5 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது.
2006-ஆம் ஆண்டில் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து 1 கோடியே 16 லட்சத்து 95 ஆயிரத்து 973 பேர் இந்த திட்டம் மூலம் பயன் அடைந்துள்ளனர். இதற்கு 10 ஆயிரத்து 529 கோடியே 57 லட்சம் செலவில் திட்டம் செயல்பட்டு வருகின்றன. கர்ப்பிணிகள் பதிவு செய்து காத்திருக்கும் போது முறையாக பணம் கிடைக்கவில்லை என்றால் மாவட்ட துணை சுகாதார அலுவலகத்தில் புகார் அளிக்கலாம். இல்லை என்றால் 104 என்ற பொது தொலைபேசி எண்ணுக்கு அழைத்தும் புகார் அளிக்கலாம்.
மேலும், கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் பதிவு செய்த சிலருக்கு நிதி வழங்காமல் இருந்தாலும் அவர்களும் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்திற்கான முகாம்கள் ஏற்கனவே அறிவித்து இருந்தபடி வரும் 18-ஆம் தேதி காலை 9 மணி முதல் 4 மணி வரை நூறு இடங்களில் சிறப்பு காப்பீட்டு திட்ட முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
இந்த 100 இடங்கள், குறைவாக காப்பீட்டு அட்டை பதிவாகி இருக்கக்கூடிய 100 சட்டமன்ற தொகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரே நாளில் நடைபெறும். இதில் காப்பீட்டு திட்டத்திற்கான அட்டைகளை பெறாதவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். புதியதாக 8 லட்சத்து 12 ஆயிரத்து 175 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். முதலமைச்சருக்கு பருவமழை காலங்களில் வரக்கூடிய வைரல் காய்ச்சல் பாதிப்பு தான். சில நாட்கள் ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் நடைபெற்ற ஐடி ரெய்டு.. வங்கிக்குச் சென்ற 2 சூட்கேஸ்கள்!