சென்னை: அண்ணா நகர் மண்டலம், ஷெனாய் நகர், புல்லா அவென்யூ, கஜலக்ஷ்மி காலனி சமுதாய நலக்கூட்டத்தில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமினை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (நவ.11) துவக்கி வைத்துப் பார்வையிட்டார்.
அதன் பிறகு பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாட்டின் 3வது பல் மருத்துவக் கல்லூரியை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கவுள்ளார்கள். அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் 17 இடங்களில் கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களும் திறந்து வைக்கப்படவுள்ளது.
நவ.14ஆம் தேதி அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் 13 மருத்துவ கட்டிடங்களை நேரில் சென்று திறந்து நான் வைக்கவுள்ளேன். இதைத் தொடர்ந்து, மக்கள் நல்வாழ்வுத் துறையில் 100க்கும் மேற்பட்ட மருத்துவ கட்டிடப் பணிகள் நடைபெற்று வருகிறது. வாடகை கட்டிடங்களில் இயங்கி வரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களுக்கு புதிய கட்டிடங்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
அதனைத் தொடர்ந்து பேசிய அவர், சென்னையில் மட்டும் வார்டுக்கு ஒன்று என 200 இடங்களில் திறக்க திட்டமிடப்பட்டு, 140 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் திறந்து வைக்கப்பட்டது. மேலும், தமிழ்நாடு முழுவதும் 152 நகர்ப்புற நலவாழ்வு மையம் கட்டும் பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளது. இவை அனைத்தும் இன்னும் 1 மாத காலத்திற்குள் தமிழ்நாடு முதலமைச்சரால் திறந்து வைக்கப்படும்.
மீதமுள்ள நகர்ப்புற நலவாழ்வு மையங்களுக்கு இடம் தேர்வு செய்யும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. மேலும், தமிழ்நாட்டில் 708 இடங்களில் நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என்று 110 விதியின் கீழ் அறிவித்தார்கள். அதில் தமிழ்நாடு முதலமைச்சர் 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்களைக் கடந்த ஜூன் 6 அன்று தொடங்கி வைத்தார். அவை அனைத்தும் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தீபாவளி கொண்டாட்டங்களை மழை தடுக்காது..! வெதர்மேன் கொடுத்த முக்கிய அப்டேட்!