சென்னை: பட்டினம்பாக்கத்தில் உள்ள மீனவர் சமுதாய கூடத்தில் நடைபெற்று வரும் 24ஆவது மெகா தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தடுப்பூசி செலுத்துவது ஒரு இயக்கமாக மாறி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மற்ற மாநிலங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்படுவதில்லை. தமிழ்நாட்டில் மட்டுமே 23 தடுப்பூசி முகாம் மூலம் 3 கோடி 79 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் உள்ள 1.33 கோடி நபர்களை இலக்காக வைத்து தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. கரோனா தினசரி தொற்று எண்ணிக்கை பூஜ்யத்தை நோக்கி நகர்ந்தாலும் அடுத்த ஓரிரு மாதங்களுக்கு மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
250 கோடி ரூபாயில் அமைய உள்ள கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் மருத்துவமனைக்கு முதலமைச்சர் விரைவில் அடிக்கல் நாட்ட உள்ளார். தமிழ்நாட்டில் 87 சதவீதம் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகி உள்ளது. எந்த ஒரு புதிய வகை தொற்று வந்தாலும் அதை எதிர்கொள்வதற்கான சுகாதார கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மொத்தம் 1,890 மாணவர்கள் தமிழ்நாடு அழைத்து வரப்பட்டத்தில் 1,524 மாணவர்கள் தமிழ்நாடு அரசின் செலவிலும் 366 மாணவர்கள் சொந்த செலவிலும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது" என கூறினார்.
தொடர்ந்து சிறையில் தனக்கு எந்தவித அடிப்படை வசதியும் இல்லை என்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டுக்கு, சிறையில் சோபா, ஏசியா போட்டு கொடுப்பார்கள் என்று பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், குற்றம் செய்தவர்கள் உணர வேண்டும் என்பதற்காக தான் தண்டனை வழங்கி சிறையில் அடைக்கப்படுவதாக தெரிவித்தார். சந்தேகம் இருந்தால் ஜெயக்குமாருக்கு தெரிந்தவர்கள் இரண்டு பேரை சிறைக்கு அனுப்பி சோதனை செய்து பார்க்க சொல்லுங்கள் என்றும் விமர்சனம் செய்தார்.
இந்த ஆய்வில் துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி துணை ஆணையர் மனீஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.