சென்னை: ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரை நேரில் சந்திக்க தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் டெல்லி செல்கிறார்.
முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து, தமிழ்நாடு சுகாதாரத்துறையை மேம்படுத்தத் தேவையான திட்டங்களை வலியுறுத்தவுள்ளோம். அப்போது, கரோனா தடுப்பூசி கூடுதலாக வழங்க வேண்டிய அவசியத்தைப் பேச உள்ளோம்.
கரோனா தடுப்பூசி ஒதுக்கீடு
தமிழ்நாட்டில் 1 கோடி தடுப்பூசி சிறப்பு ஒதுக்கீடாக உடனடியாக வழங்க வேண்டும் என பிரதமருக்கு, முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். மக்கள் தொகைக்கு ஏற்ப கூடுதல் தடுப்பூசி வழங்க வேண்டும். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணியைத் தொடங்கவும், கோயம்புத்தூரில் புதிய எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அமைக்கவும் வலியுறுத்தவுள்ளோம்.
மாணவர் சேர்க்கை
சுமார் 11 மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு உடனடியாக அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்த இருக்கிறோம். செங்கல்பட்டு, குன்னூரில் உள்ள தடுப்பூசி மையங்களை உடனடியாக திறக்க வேண்டிய அவசியம் வலியுறுத்தப்படும். தட்டுப்பாட்டைப் போக்க 2 தடுப்பூசி மையங்கள் உதவியாக இருக்கும்.
நீட் தேர்வு விலக்கு
நீட் தேர்வு விலக்கு உள்பட 13 கோரிக்கைகளை மனுவாக எடுத்துச் செல்கிறோம். நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டியதன் அவசியத்தை ஒன்றிய அமைச்சரிடம் வலியுறுத்துவோம்.
நீதியரசர் ஏ.கே.ராஜன் அறிக்கை தொடர்பாக முதலமைச்சர் சட்ட வல்லுநர்களுடன் கலந்து பேசி எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து அறிவிப்பார்’என்றார்.
இதையும் படிங்க: நீட் தேர்வுக்குத் தயாராவது தவறல்ல - சொல்கிறார் அமைச்சர் மா.சு.