சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மின்காந்த அதிர்வலை சிறுநீரக கல் நீக்க சிகிச்சை மையத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். தனியார் நிறுவனத்தின் பங்களிப்பு நிதியுடன் 2.3 கோடி செலவில் அறுவை சிகிச்சையின்றி சிறுநீரக கல்லை அகற்றும் நவீன சிறுநீரக கல் அகற்றும் இயந்திரம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு 125 கோடி மதிப்பில் புதிய கட்டடம் கட்டும் பணி விரைவில் துவங்கப்பட உள்ளது. அறுவை சிகிச்சை இல்லாமல் சிறுநீரக கல் அகற்றும் இயந்திரம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
வரும் ஜூன் 5ஆம் தேதி கருணாநிதி நூற்றாண்டு பன்நோக்கு மருத்துவமனையை திறந்து வைக்க குடியரசு தலைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தமிழ்நாடு ஆளுநருக்கு திறப்பு விழாவிற்கு வருவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆளுநர் மருத்துவமனை திறப்பு விழாவிற்கு வருவதற்கு ஒப்புக்கொண்டார். தமிழ்நாடு ஆளுநரிடம் மருத்துவமனை திறப்பு விழா பற்றி மட்டுமே பேசினோம். சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பாக ஏற்கனவே துறை சார்பில் விளக்கங்கள் அளிக்கப்பட்டு விட்டது. விரைவில் அனுமதி வழங்குவார் என எதிர்பார்க்கிறோம்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "தமிழக அரசின் சார்பில் ஒன்றிய சுகாதாரத் துறை இடம் 30 செவிலியர் கல்லூரிகள் வேண்டுமென கோரிக்கை வைத்தோம் 11 செவிலியர் கல்லூரி அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 11 செவிலியர் கல்லூரிகளுக்கும் மத்திய அரசு தலா 10 கோடி நிதி ஆதாரமாக கொடுத்துள்ளது. ஏற்கனவே புதிதாக தொடங்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளில் செவிலியர் கல்லூரியும் தொடங்கப்பட உள்ளது. ஒரு கல்லூரிக்கு 100 இடங்கள் என ஆயிரத்து நூறு இடங்களில் செவிலியர் படிப்பு பயில உள்ளனர். இவர்களுக்கான தங்கும் வசதி ஏற்படுத்தப்பட்ட உடன் இந்தாண்டோ அல்லது வரும் ஆண்டிலோ மாணவர் சேர்க்கை நடைபெறும்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை பொறுத்தவரையில் டெண்டர்கள் விடப்பட்டு டிசம்பர் மாதம் இறுதியில் கட்டுமான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணிகள் நான்கு ஆண்டுகள் நடைபெற்று 2028 ஆம் ஆண்டு இறுதியில் நிறைவடையும் என எதிர்பார்க்கிறோம். நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தொடர்ந்து 104 என்ற எண்ணின் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டிலும் நீட் தேர்வு முடிந்த பின்னர் மாணவர்களை தொடர்பு கொண்டு ஆலோசனை வழங்கப்படும். குட்கா, பான் பராக் போன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள் வைத்து இருப்பது குறித்து தெரிவித்தால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.