சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூட்டு தசை மற்றும் இணைப்பு திசு நோய்களில் துறை பொன் விழா ஆண்டை முன்னிட்டு துறை சார்ந்த முன்னாள் மற்றும் இந்நாள் பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்குச் சிறப்பு செய்து, இளங்கலை மாணவருக்கான தங்கப் பதக்கம் வழங்கி, நோயாளிகளுக்கான உதவிக் கருவி வழங்கி, பொன்விழா மலரை வெளியிட்டார்.
அதன் பின்னர் மேடையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில்,”இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூபாய் 14.4 இலட்சம் செலவில், Nallfold capllaro scopy என்று அழைக்கப்படுகின்ற நுண் ரத்த நாளப் பரிசோதனைக் கருவி முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தில் வாங்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக நேற்று திறந்து வைக்கப்பட்டது.
நோயாளிகளுக்கான பொது நூலகம் நேற்று திறந்து வைக்கப்பட்டது. மூட்டு, தசை, இணைப்புத் திசு நோய்களியல் சிறப்புப்பிரிவு தொடங்கப்பட்டது. மஜ்ஜை மாற்று சிகிச்சையானது இரத்த புற்றுநோய் மற்றும் அப்லாஸ்டிக் அனீமியா (APLASTIC ANEMIA) என்கிற தீவிரமான இரத்த சம்பந்தப்பட்ட நோய்களுக்கு, உயிர் காக்கும் சிகிச்சையாகும்.
நோயாளிகளுக்கு, இந்த உயர் சிகிச்சை, செலவின்றி காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அளிக்கப்படுவதாகவும், பொதுமக்கள், இந்நோயாளிகளுக்கு உதவும் விதமாக, குருத்தணு கொடை குருத்தணு பதிவேடு நிறுவனங்கள் மூலமாக கொடுத்து, இந்த உயிர்க் காக்கும் சிகிச்சை அளிக்க உதவலாம் என்று தெரிவித்தார்.
மூட்டு, தசை, இணைப்புத்தி நோய்களியல் சிறப்புப்பிரிவு 1972ம் ஆண்டு துவங்கப்பட்டு, பேராசிரியர், A.N.சந்திர சேகரன் அவர்களது முயற்சியால் தனித்துறையாக உருவாக்கப்பட்டதாகவும், இந்தியாவிலேயே முதன்முறையாக இந்தத்துறை சென்னை மருத்துவக்கல்லூரியில் தான் உருவாக்கப்பட்டது.
பின்னர் 1991-ம் ஆண்டு DM (Rheumatology) முதுகலைப்பட்ட மேற்படிப்பு துவங்கப்பட்டதாகவும், இந்தத்துறையானது 2015ஆம் ஆண்டு மூட்டு, தசை, இணைப்புத்தி நோய்களியல் நிலையமாக (Institute) தரம் உயர்த்தப்பட்டதாகவும், மேலும், 2021-ம் ஆண்டு முதல் புதிய கட்டிடத்தில் 120 படுக்கைகளுடன் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
மேலும், வெளி நோயாளிகள் தினமும் 300 பேர் பயன்பெற்று வருவதாகவும், தீவிர சிகிச்சைப்பிரிவு 10 படுக்கைகளுடன் இயங்கி வருவதாகவும் கூறினார். ஒவ்வொரு பிரிவுக்கும் இங்கு தீவிர சிகிச்சைப் பிரிவுகள் தனியாகத் தொடங்கப்பட்டுள்ளது என்றும், ராஜீவ்காந்தி அரசு பொது கல்லூரி மற்றும் மருத்துவமனையில் தினம்தோறும் 17 ஆயிரத்திற்கும் மேல் புறநோயாளிகள் சிகிச்சைக்காக வருவதாகவும் இங்கு 2000த்திற்கும் மேலாகப் படுக்கை வசதி உள்ளது.
உடல் உறுப்பு தானங்கள் உக்குவிக்கபட்டு தற்போது தமிழ்நாடு இந்தியாவிற்கே முன்மாதிரியாகத் தலைநிமிர்ந்து நிற்கிறது. கல்லீரல், சிறுநீரகம், இதயம், கணையம், எலும்பு, தோல், மஜ்ஜை, கண்கள் என்று ஏராளமான உடலுறுப்பு தானங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டு வருகிறது. மூளைச்சாவு அடைந்தவர்களிடம் உறுப்புகளைப் பெற்று அதன் மூலம் தினந்தோறும் ஏராளமான பேர் உயிர் பெற்றுவருவதாகக் கூறினார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்புவரை ஒரு குறிப்பிட்ட மருத்துவமனைகளில் மட்டும் உறுப்புகளைப் பரிமாற்றம் பெறுவதற்கு உரிமம் இருந்தது. தற்போது தமிழ்நாட்டில் இருக்கின்ற 36 அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் உறுப்புகளைப் பரிமாற்றும் செய்யும் உரிமம் வழங்கப்பட்டு இருப்பதாலேயே தஞ்சை, திருச்சி போன்ற அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் உறுப்புகள் பரிமாற்றம் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது” எனக் கூறினார்.
அதனைத் தொடர்ந்து சென்னை ராணிமேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவந்த, வியாசர்பாடி சேர்ந்தவர் 17 வயது உடைய கால்பந்து விளையாட்டு மாணவி கால் இழக்கக் கொளத்தூர் அரசு மருத்துவமனையின் அலட்சியமே காரணம் என பெற்றோர் குற்றம் சாட்டிய நிலையில், தற்போது சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள மாணவியை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேரில் சென்று நலம் விசாரித்தார்.
இதையும் படிங்க: அமைச்சர் சேகர்பாபு மகள் காதல் திருமண விவகாரம்: பொய் வழக்கு போடுவதாக மகனின் பெற்றோர் குற்றச்சாட்டு