சென்னை: அமைச்சர் மா. சுப்பிரமணியனை மத்தியப் பிரதேச சுகாதாரத் துறை அமைச்சர் விஸ்வாஸ் கைலாஷ் சாரங் மரியாதை நிமித்தமாக இன்று (ஜூலை 21) தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மா. சுப்பிரமணியன், "தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை இரண்டு கோடியை நெருங்கிவருகிறது. கோயம்புத்தூர், சேலம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் 117 மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவர்களிடம் ஆலோசனை நடைபெற்றது.
சுமார் 17 லட்சம் தடுப்பூசிகள் தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், வெறும் நான்கு லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே பொதுமக்களுக்குச் செலுத்தப்பட்டுள்ளன. மீதமிருக்கும் 13 லட்சம் தடுப்பூசிகளும் பொதுமக்களுக்குச் செலுத்தப்படும். பொதுமக்கள் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வம் காட்டவில்லை.
தனியாரில் இலவச தடுப்பூசி
தனியார் மருத்துவமனைகள் சி.எஸ்.ஆர். திட்டத்தின்கீழ் இலவசமாகத் தடுப்பூசி வழங்கும் திட்டம் நேற்று (ஜூலை 20) கோயம்புத்தூரில் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டிற்கு இன்னும் 10 கோடி தவணை தடுப்பு மருந்துகள் தேவை. சுமார் ஐந்து லட்சத்து 42 ஆயிரம் தடுப்பூசிகள் இன்று (ஜூலை 21) மாலை வரவுள்ளன.
இதனால் அடுத்து மூன்று நாள்களுக்குத் தடுப்பூசி பற்றாக்குறை இருக்காது. மேலும் ஐந்து லட்சம் தடுப்பூசிகள் இந்த மாத இறுதிக்குள் ஒன்றிய அரசு அனுப்பவுள்ளது. தமிழ்நாட்டில் ஒருவர்கூட ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழக்கவில்லை.
பணி நிரந்தரம்
ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட சுமார் 30 ஆயிரம் செவிலியரின் பணிக்காலம் டிசம்பர் வரை நீட்டிப்புச் செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்று காலத்தில் பணிபுரிந்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணி நிரந்தரம் செய்யப்படும். இனி தனியார் நிறுவனம் மட்டும் பயன்பெறக்கூடிய வகையில் அவுட்சோர்சிங் முறை செய்யப்பட மாட்டாது" என்றார்.
இதையும் படிங்க: மருந்தாளுநர் பணி அறிவிப்பு - அன்புமணி ராமதாஸ் வரவேற்பு