சென்னை: தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு நேற்று (ஜூலை 1) எழும்பூர் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் URPS 2022 -LIVE OPERATIVE WORKSHOP & INTERNATIONAL HYBRID CONFERENCE மற்றும் முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
மகளிர் சிறப்பு சிறுநீரயியல் மாநாடு மற்றும் தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு மருத்துவர்களுக்குப் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "கஸ்தூரிபாய் மருத்துவமனையில் 30 வருடங்களுக்கு முன்பு சிறுநீரயியல் துறை தொடங்கி, அதன் மூலம் வெளி மாநிலங்களில் இருந்தும் கூட வந்து, பயிற்சி பெற்று வருகின்றனர்.
டெல்லி எய்ம்ஸ் போன்ற மருத்துவமனையில் மட்டும் இருக்கும் இந்த சிகிச்சை முறை தமிழ்நாட்டில் 30 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருக்கிறது. 23 காசநோய் சிகிச்சை பெறும் நடமாடும் வாகனங்களை முதலமைச்சர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார். காசநோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிப்பது மட்டும் இல்லமால் அவர்களுக்கு ஊட்டச்சத்து பொருட்களை 110 தன்னார்வலர்கள் வழங்கி வருகிறார்கள்.
அவர்களுக்குப் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் சிறுநீரகத் துறை சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் 63 சதவீதம் பெண்களுக்கு சிறுநீரக பிரச்சினை ஏற்படுகிறது. அதிலும், குறிப்பாக 35 வயதிற்கு மேற்பட்ட 50 சதவீதம் பெண்களுக்கு சிறுநீரக பிரச்சனை ஏற்படுகிறது" என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், "கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது என எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டில் 2 ஆயிரத்திற்கும் மேலாக பாதிப்பு எண்ணிக்கை உள்ளது. முதலமைச்சருடன் நடைபெற்ற கூட்டத்தில் கரோனா பரவும் தன்மை வேகமாக உள்ளதால், இதிலிருந்து தற்காத்துக் கொள்ள அரசு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், 10-க்கும் மேற்பட்ட நபர்கள் கூடும் அனைத்து இடங்களிலும் முகக்கவசம் கட்டாயம். மேலும், தடுப்பூசி போடப்பட்டு ஒரு ஆண்டுக்கு மேல் ஆகியுள்ளதால் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாகி இருக்கும். எனவே, நாம் கவனமாக இருக்க வேண்டும். மூன்றாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டிய நபர்கள் தடுப்பூசிகளைச் செலுத்திக்கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் 95% பேர் முதல் தவணை தடுப்பூசியும், 85% பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்திள்ளனர். மேலும், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனையிலும், 18-59 வயதுடையவர்கள் தனியார் மருத்துவமனையிலும் செலுத்தப்பட்டு வருகிறது. பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் இருப்பவர்கள் உடனடியாக சென்று தடுப்பூசி செலுத்த வேண்டும்.
கரோனா பரவல் அதிகரிக்கும்போது அனைத்து மருத்துவமனைகளிலும் போதுமான நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம். தமிழ்நாட்டை பொறுத்தவரை 95 சதவீதம் நபர்கள் வீட்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 5 சதவீதம் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், 30 ஆயிரத்திற்கும் மேல் நாள் ஒன்றுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை எடுத்து வருகிறோம். கரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் அதிமுக தலைமை பொதுக்குழு கூட்டத்தை பாதுகாப்பாக நடத்த வேண்டிய பொறுப்பு உள்ளதாகவும், கட்சி தலைமை தங்கள் நிர்வாகிகளைப் பாதுகாக்க முறையான முகக்கவசம் அணிய சொல்லி, அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது" எனத் தெரிவித்தார்.