தமிழ்நாடு அரசின் கால்நடை வளர்ப்புத் திட்டத்தின் கீழ், ஆவடியை அடுத்த திருநின்றவூர் பகுதியில் நாட்டுக் கோழிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தொல்லியல் துறை அமைச்சர் கே. பாண்டியராஜன் கலந்துகொண்டு 150 பயனாளிகளுக்கு நாட்டுக் கோழிக் குஞ்சுகளை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவரிடம் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு குறித்து அவரிடம் கேட்டதற்கு, 'திமுக வேட்பாளர்களைச் சீக்கிரம் அறிவித்திருப்பதால் அதிக இடங்களில் வெற்றிபெறும் என்று நினைக்கக்கூடாது. யாரை நிறுத்தினால் வெற்றி கிடைக்கும் என்று கழக ஒருங்கிணைப்பாளர் ஆலோசித்து, சரியான நேரத்தில் அறிவிப்பார்' என்றார்.
மாநிலங்களிலுள்ள கோயில்களின் புராதனச் சின்னங்கள் மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும் என்று கூறப்பட்டுள்ளது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அவர், ’தமிழ்நாடு புராதனச் சின்னங்களை மத்திய அரசுக்கு மாற்ற வேண்டும் என்று எந்த கோரிக்கையும் எழவில்லை. இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தவறான கருத்தைப் பரப்புகிறார். 92 புராதனச் சின்னங்களை தமிழ்நாட்டின் தொல்லியல் துறை பராமரித்து வருகிறது. 413 புராதனச் சின்னங்களை மத்திய அரசு பராமரித்து வருகிறது.
மத்திய அரசு தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள புராதனச் சின்னங்களை தமிழ்நாட்டிற்கு வழங்க இருப்பதாகவும், முறையாகப் பராமரிப்பில் இல்லாத சின்னங்களை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டுசெல்ல இருப்பதாகவும்தான் தெரிவித்துள்ளது. ஆனால், எந்த மாநிலத்தில் எடுக்கப்படும் என்பது குறிப்பிடப்படவில்லை.
இதுவரை மத்திய அரசு நம்மிடம் எந்த புராதனச் சின்னங்களையும் கேட்கவில்லை. மாறாக நாம் தான் மத்திய அரசிடம் சில புராதனச் சின்னங்களைக் கேட்டுள்ளோம். இதுகுறித்து ஸ்டாலின் வதந்தி பரப்புகிறார். மத்திய அரசு எங்களிடம் எந்தச் சின்னங்களையும் கேட்கவில்லை. நாங்களும் கொடுக்கிறோம் எனக் கூறவில்லை’ என்றார்.
இதையும் படிங்க: 'மத்திய அரசின் கலாசார படையெடுப்பு' - ஒருசேர எதிர்க்கும் வீரமணி, ஸ்டாலின், ராமதாஸ்!