ரத்த தானம் செய்த அமைச்சர். மா. சுப்பிரமணியன்:
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உலக ரத்த கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ரத்த தானம் செய்தார்.
உலக ரத்த கொடையாளர் தினம்:
விலை மதிப்பற்ற மனித உயிர்களைக் காப்பாற்றும் ரத்த தானத்தின் அவசியம் குறித்தும், ரத்த தானம் செய்வது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டு ஜுன் 14ஆம் தேதி உலக ரத்த கொடையாளர் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டின் உலக ரத்த கொடையாளர் தினத்தின் கருப்பொருள் 'உதிரம் கொடுப்போம் உலகினை துடிப்புடன் வைத்திருப்போம்' என்பதாகும்.
அறுவை சிகிச்சை மேற்கொள்பவர்கள், விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுபவர்கள், ரத்த பற்றாக்குறை உள்ள கர்ப்பிணிகள், ரத்த தட்டுக்கள் குறைபாடுள்ளவர்கள் உள்ளிட்ட நோயாளிகளின் உயிரை காப்பாற்ற ரத்தம் செலுத்த வேண்டியது அவசியம்.
18 வயது முதல் 60 வயது வரை உள்ள ஆரோக்கியமான ஆண், பெண் அனைவரும் தாராளமாக ரத்த தானம் செய்யலாம். ரத்த தானம் செய்ய இருபது நிமிடங்களே போதுமானது. ரத்த தானத்தின்போது 300 மி.லி. ரத்தம் மட்டுமே எடுக்கப்படுகிறது. நீங்கள் தானமாக வழங்கிய 1 யூனிட் ரத்தம் நான்கு உயிர்களைக் காப்பாற்றும்.
கரோனா காலத்தில் யார் ரத்தம் அளிக்கலாம்:
கரோனா பேரிடர் காலங்களில் ரத்த கொடையாளர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் முன் ரத்த தானம் செய்யலாம், ரத்த தானம் வழங்கிய பின் மூன்று நாள்கள் கழித்து கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
கரோனா தடுப்பூசியின் முதல் தவணை போட்டுக்கொண்டவர்கள் 14 நாள்களுக்கு பின் ரத்த தானம் செய்யலாம். இப்பேரிடர் காலக்கட்டத்தில் தொடர் தன்னார்வ குருதி கொடையாளர், செஞ்சுருள் சங்கம், நாட்டு நலப்பணி திட்டம், தன்னார்வ ரத்த தான முகாம் அமைப்பாளர்கள், கரோனா தன்னார்வலர்கள் மூலம் கடந்தாண்டில் மட்டும் 2, 74,755 அலகுகள் ரத்தம் சேகரிக்கப்பட்டு தேவைப்படும் நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
தன்னார்வ ரத்த கொடையாளர்கள் மூலம் ரத்த சேகரிப்பதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது. நடப்பாண்டில் தன்னார்வ ரத்த தானத்தில் தமிழ்நாடு 100 விழுக்காடு இலக்கினை அடைய மக்கள் அனைவரும் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் ரத்த தானம் செய்தார்.
பிறந்தநாளில் ரத்த தானம் வழங்கும் முதலமைச்சர்கள்:
இதுபோல் 60 முறைக்கு மேல் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் தங்களது பிறந்தநாளில் ரத்த தானம் வழங்குவதை வழக்கமாக கொண்டவர்கள்.
இதையும் படிங்க:'உலக ரத்த தான தினம்' - ரத்த தானம்.. உயிர் தானம்..