சென்னை: வடகிழக்கு பருவமழையின் தீவிரத்தால் பாதிக்கப்பட்ட சென்னை புறநகர் பகுதிகளான முகலிவாக்கம், கொளப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு ஆய்வு செய்தார்.
மழை நீர் தேங்கியுள்ள குடியிருப்பு பகுதிகளில் சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, அத்தியாவசிய பொருட்களையும் வழங்கினர். மேலும், தண்ணீர் வெளியேற்றும் பணிகளை துரிதப்படுத்தி கால்வாய் ஆக்கிரமிப்புகள் மீது நடவடிக்கை எடுக்கவும் அமைச்சர் நேரு உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “போரூர் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் தற்போது இந்த குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துள்ளது. மோட்டார்கள் கொண்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஒரு நாளில் தண்ணீர் முழுவதும் வடிந்து இயல்புநிலை திரும்பும்.
போரூர் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற 120 கோடி மதிப்பீட்டில் புதிய கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 40% பணிகள் நடைபெற்று முடிந்ததுள்ளது. அந்த பணிகள் முடிவடையும் பட்சத்தில் வருங்காலத்தில் இந்த பகுதிகளில் மழைநீர் மற்றும் உபரிநீர் புகுவது தவிர்க்கப்படும்.
மழைநீர் செல்லக்கூடிய இடங்களில் கால்வாய் ஆக்கிரமிப்புகள் மற்றும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகள் உள்ளன. நீதிமன்றம் உத்தரவுப்படி அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. அவர்களுக்கு மாற்று இடம் வழங்கிய பின்னர் முழுமையாக அகற்றப்படும்.
மேலும், வடிகால் பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்காத ஒப்பந்ததாரர்களை தற்போது நீக்கினால் மீண்டும் டெண்டர் கொடுத்து பணிகள் முடிவடைய மேலும் மூன்று மாதங்கள் ஆகும். அதனால் அவர்களையும் அரவணைத்து வேகமாக பணிகளை மேற்கொள்ள கூறி வருகிறோம், இருப்பினும் மிகவும் மோசமாக பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள் பணி ஆணை நீக்கப்பட்டு அவர்கள் பிளாக் செய்யப்படுவார்கள்” என அமைச்சர் நேரு தெரிவித்தார்.
ஆய்வின் போது அமைச்சர்களும் த.மோ.அன்பரசன், ஆவடி நாசர், மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், நகராட்சி நிர்வாகத் துறை முதன்மைச் செயலாளர் சிவதாஸ்மினா, மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி உள்ளிட்ட ஏராளமான அதிகாரிகளும் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: முல்லை பெரியாறு..15 மரங்களை வெட்ட அனுமதி கோரி தமிழகம் உச்ச நீதிமன்றத்தில் மனு