அண்ணா பல்கலை., அதன் கீழ் இயங்கிவரும் கல்லூரிகளில் சேர்வதற்காக விண்ணப்பித்திருந்த மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் www.tneaonline.in என்ற இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதனை வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.பி. அன்பழகன், “இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேர்ந்து படிப்பதற்கு ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 940 இடங்கள் உள்ளன. 479 கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ள நிலையில், 15 பொறியியல் கல்லூரிகள் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்கப்படவில்லை.
அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒன்பதாயிரத்து 110 இடங்கள் உள்ளன. அவற்றில் இந்த ஆண்டு எட்டு பிரிவுகளில் 270 இடங்களில் மாணவர் சேர்க்கை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 8,840 மாணவர்கள் மட்டுமே அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்க்கப்படுவார்கள். அண்ணா பல்கலைக்கழகம், அதன் உறுப்புக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை உயர்த்தி அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த கட்டண உயர்வானது சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும். கல்லூரிகளுக்குத் தேவையான தண்ணீர் வசதி ஏற்படுத்தித் தருவதற்கு அரசு தயாராக உள்ளது” என்று தெரிவித்தார்.