சென்னை போரூரில் செயல்பட்டுவரும் அகர்வால் தனியார் கண் சிகிச்சை மருத்துவமனையில், உலர் கண் சிகிச்சைக்கான புதிய தொழில்நுட்பம் கொண்ட மருத்துவக் கருவி அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டு மருத்துவக் கருவியை அறிமுகம் செய்து வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு கலந்துரையாடல் மூலம் அவர் பதிலளித்தார்.
அப்போது அவர், ”அரபிக்கடலில் சிக்கியுள்ள மீனவர்கள் பெங்களூரு விமானப்படை, கப்பற்படை ஆகியோரின் முயற்சியால் பத்திரமாக மீட்கப்பட்டு மகாராஷ்டிரா, கோவா ஆகிய பகுதிகளில் பத்திரமாக மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட மீனவர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் அவர்களது சொந்த ஊருக்கு திரும்புவார்கள். மேலும் ஐந்தாம், எட்டாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு குறித்த வரைவு அறிக்கை மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதுகுறித்து எவ்வித பதற்றமும் மாணவர்கள் அடையத் தேவையில்லை” என்றார்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதானவர்களின் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அரசின் சார்பாக போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்தது குறித்து நீதிமன்றத்திடம் கருத்துகளை கேட்க வேண்டும் எனவும் அரசு யாருக்கும் ஆதரவாகச் செயல்படவில்லை எனவும் அவர் கூறினார்.
மேலும் தனது நண்பர் ரஜினிக்கு திரையுலகின் உயரிய விருதான வாழ்நாள் சாதனையாளர் விருது அளித்திருப்பது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், மேலும் அவர் பல்வேறு விருதுகளை பெறவேண்டுமெனவும் அமைச்சர் வாழ்த்து தெரிவித்தார்.
இதையும் படிங்க:சூப்பர் ஸ்டாருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிப்பு