சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் இன்று நடைபெற்ற, சரக்கு மற்றும் சேவை வரி குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில், அமைச்சர் ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
"ஸ்காட்லாந்து காவல் துறைக்கு இணையாக தமிழ்நாடு காவல் துறையினர் செயல்பட்டுவருகின்றனர். அதனால் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக வரும் தகவல் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. தமிழ்நாடு முழுவதும் காவல் துறையினர் அதிக விழிப்புடன் செயல்பட்டுவருகின்றனர்.
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பினரை (சிபிஐ) சுவர் ஏறி குதித்து கைது செய்யவேண்டிய நிலைக்கு தள்ளியது சிதம்பரம்தான். பயமில்லை என்றால் நேரிடையாக விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டியதானே?
சிதம்பரம் இந்தியாவிற்கு மட்டுமல்ல தமிழ்நாட்டிற்கும் ஒன்றும் செய்யவில்லை. யாருக்கும் ஏதும் செய்யாதவர், அதனால்தான் அவரின் நிழல்கூட இன்று அவரை திரும்பிப் பார்க்கவில்லை" என்று தெரிவித்தார்.
உங்களை ஜோக்கர் என ஸ்டாலின் கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, ஜோக்கர் இல்லாமல் சீட்டாட்டம் மட்டுமல்ல, அரசியல் ஆட்டமே இல்லை. ஜோக்கர் சிரிக்கவைப்பான்; சிந்திக்க வைப்பான் என்றார்.
ஆனால் ஸ்டாலின் சந்தி சிரிக்கத்தான் வைப்பார் என்று சொன்ன ஜெயக்குமார், அவர் ஒரு அரசியல் தரகர் என விமர்சனம் செய்தார். தலைவர் பதவிக்கு தகுதியில்லாதவர் ஸ்டாலின் என கடுமையாக சாடினார்.