சென்னை : தங்க சாலையில் உள்ள முன்னாள் மேயர் சிவராஜ் அவர்களின் 129ஆவது பிறந்த தினத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் அவரது உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.பாண்டியராஜன், கடம்பூர் ராஜு, பெஞ்சமின், சரோஜா உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், "அதிமுக செயற்குழு கூட்டம் ஆரோக்கியமான விவாதங்களுடன் நேற்று (செப்.28) நடைபெற்று முடிந்தது. அதிமுக கூட்டத்தில் பூகம்பம் வெடிக்கும், குளறுபடி ஏற்படும், அதில் குளிர் காயலாம் என்று நினைத்த திமுகவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
அதிமுக செயற்குழுவில் ஜனநாயக ரீதியில் ஆரோக்கியமான விவாதங்கள் எழுந்தன. செயற்குழுக் கூட்டத்தில் சசிகலா குறித்து விவாதிக்கப்படவில்லை. அவர் குறித்து விவாதிக்க வேண்டிய அவசியமும் இல்லை. முதலமைச்சர் வேட்பாளர் குறித்த அறிவிப்புகளெல்லாம் உரிய நேரத்தில், குறித்த காலத்தில் அறிவிக்கப்படும்.
வேளாண் சட்டங்கள் குறித்து திமுக திட்டமிட்ட நாடகத்தை நடத்தி வருகிறது. வேளாண் சட்டங்கள், விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான விலையை உறுதி செய்யும். இதனால், விவசாயிகள் எந்தவித பிரச்னையும் எதிர்கொள்ள மாட்டார்கள். திமுக, இந்த விவகாரத்தை வேண்டுமென்றே அரசியலாக்கி வருகிறது.
மத்திய அரசு ஆட்சியில் அங்கம்வகித்த திமுக, விவசாயிகளுக்காக எந்தவிதத் திட்டங்களையும் கொண்டு வராமல், ஒட்டுமொத்த விவசாயிகளுக்கும் துரோகம் இழைத்தது.
திமுக இளைஞரணி செயலர் உதயநிதி, அரசியல் நாகரீகம் தெரியாமல் வார்த்தைகளை விடுகிறார். தருதலையாக இருப்பவர்தான் பார்ப்பவர்களை எல்லாம் தருதலை என்று சொல்வார்கள்" என்றார்.
இதையும் படிங்க: அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார்? - செயற்குழுவில் வெடித்த கருத்து மோதல்!