சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் கஜபதி தெருவிலுள்ள அம்மா மினி கிளினிக் கட்டடத்தை மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று (பிப்.22) திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, “அம்மா மினி கிளினிக் திட்டத்தின் மூலம் ஒரு நாளைக்கு சராசரியாக 50 முதல் 100 பேர் வரை பயன்பெறுகின்றனர். இது வரை சென்னையில் 149 அம்மா மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 51 மினி கிளினிக்குகள் விரைவில் திறக்கப்படவுள்ளன” எனத் தெரிவித்தார்.
வருகின்ற பிப்.24-ஆம் தேதி ஜெயலலிதா நினைவிடம் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படுமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் கூறியதாவது, “இரண்டாம் கட்டப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் இந்த பணிகளுக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்படக்கூடாது என்பதற்காகவே தற்போது நினைவிடம் மூடப்பட்டிருக்கிறது.
கட்டுமான பணிகள் முழுவதுமாக நிறைவடைந்த பிறகே பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்படும். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ஆம் தேதி திறக்க வாய்ப்பில்லை” என்றார்.
புதுச்சேரியில் நடைபெற்று வரும் தற்போதைய அரசியல் நாடகம், தமிழ்நாட்டிற்கான ஒத்திகை என்ற திருமாவளவன் விமர்சனத்திற்கு பதில் அளித்த அவர், “திமுக-காங்கிரஸ் கூட்டணி என்பது தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னாலேயே உடைந்துவிடலாம். திமுக-காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் உறுதித்தன்மையற்று இருப்பதால்தான் புதுவையில் தற்போது காங்கிரஸ் அரசு கவிழ்ந்திருக்கிறது.
மேலும், திமுகவில் உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளது. திமுகவில் உள்ள பல மூத்த தலைவர்களுக்கு உரிய முக்கியத்துவம் தரப்படுவதில்லை. உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, தயாநிதி மாறன் போன்றவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுகிறது” என்றார்.
ஓபிஎஸ் குறித்த டிடிவி தினகரனின் கருத்திற்கு அவர் கூறியதாவது, “ராவணனுக்கு தான் ராவணன் பற்றிய சிந்தனைகள் இருக்கும். அதிமுகவில் அதிகளவில் ராமர்கள் நிறைந்துள்ளனர். டிடிவி தினகரனின் கனவு என்றுமே பலிக்காது” எனத் தெரிவித்தார். சகாயம் ஐஏஎஸ் அவர்களின் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு, “முதலில் அவர் கட்சி தொடங்கட்டும், பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு உள்ளிட்ட அனைத்து பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று கொண்டிருப்பதாகவும், உரிய நேரத்தில் கட்சித் தலைமை அதனை முறைப்படி அறிவிக்கும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பஞ்சு உற்பத்தி அதிகரிக்க அரசு திட்டம்: அமைச்சர் செங்கோட்டையன்