சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், “உலக மீனவர் தினத்தை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மீனவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அரசு வழங்கி வருகிறது. திமுக நீதிமன்றம் சென்றபின், நீண்ட போராட்டத்திற்குப் பின் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது.
தேர்தல் நடக்கவுள்ளதை மகிழ்ச்சியாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதைவிட்டு போகாத ஊருக்கு வழி சொல்வது போல பேசக்கூடாது. மறைமுகத் தேர்தலிலும் யார் வெற்றியாளர் என்பதை மக்கள் தான் தீர்மானிப்பார்கள். திமுக ஆட்சியில் 2006இல் இதேபோல மறைமுகத் தேர்தல் நடந்தது. ஆனால் இப்போது நாங்கள் அதை நடத்துகிறோம் என்று கூறினால் திமுக எதிர்க்கிறது. மாமியாருக்கு ஒரு சட்டம்? மருமகளுக்கு ஒரு சட்டமா?.
தமிழ்நாட்டில் ஜனநாயக ரீதியாகவும் அமைதியாகவும் தேர்தல் நடைபெற வேண்டுமென்பதே அதிமுகவின் நோக்கம். திமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற தேர்தல்களில் கலவரம் வெடித்தது. ஜனநாயகத்தை மட்டுமே நம்பியுள்ள அதிமுகவிற்கு வன்முறையில் நம்பிக்கை கிடையாது. ஜனநாயக ரீதியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த அரசு அனைத்து உதவிகளையும் செய்யும். உள்ளாட்சியிலும் நல்லாட்சி தொடரும் என்பதுதான் அதிமுகவின் கொள்கை” என்றார்.
இதையும் படிங்க: 'கோத்தபய ராஜபக்ச இந்தியா வருவதைக் கடுமையாக எதிர்ப்போம்' - திருமுருகன் காந்தி