ராமநாதபுரம் மாவட்டம் ரோச்மா நகர், தங்கச்சிமடம் கிராமங்களில் கடல் அரிப்பு தடுப்புப் பணி, மீன் இறங்குதளம் ரூ.18.86 கோடி மதிப்பீட்டில் அமைக்க தமிழ்நாடு அரசால் இப்பணிகளுக்கான நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கும் நிலையிலுள்ளன என்று அமைச்சர் ஜெயக்குமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராமநாதபுரம் மாவட்டம், ரோச்மா நகர் மற்றும் தங்கச்சிமடம் மீனவ கிராமங்கள் கடல் சீற்றத்தினால் கடல் அரிப்பு ஏற்பட்டு பாதிப்படைந்துள்ளதால், கடல் அரிப்பைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற இப்பகுதி மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையின் அடிப்படையில், முதலமைச்சரின் 2020-21ஆம் நிதியாண்டில் விதி எண் 110இன் கீழ் ராமநாதபுரம் மாவட்டம், ரோச்மா நகர் கிராமத்தில் ரூ.9.91 கோடி செலவிலும், தங்கச்சிமடம் கிராமத்தில் ரூ.8.95 கோடி செலவிலும் நேர்கல் சுவர்களுடன் கூடிய மீன் இறங்குதளங்கள், கடல் அரிப்பு ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் அமைக்கப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.