சென்னை: தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகைக்கடன் பெற்றவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தது. அதனை தொடர்ந்து திமுக அரசு கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்ததும், அந்த வாக்குறுதி செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் செப்.13ஆம் தேதி அன்று சட்டப்பேரவையில், ”கூட்டுறவு வங்கிகளில் ஐந்து சவரன் வரை பெறப்பட்ட நகைக்கடன் தகுதியின் அடிப்படையில் தள்ளுபடி செய்யப்படும்” என அறிவித்தார்.
இதனை அடுத்து, பட்ஜெட்டில் 2022-23 நகை கடன் தள்ளுபடிக்காக முதல் கட்டமாக ரூ. 1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 5 சவரனுக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள அனைத்து நகைக்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதனை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்க வங்கிகளில் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவைத் தொடர்ந்து 110 விதிகளின்படி நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான ரசீதுகளும், நகைகளும் பயனாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை 13 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 97.05 சதவீத அளவிற்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவு அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். மேலும், இதுவரை 12,19,106 பேரின் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், ஒரு வாரத்தில் 4805 கோடி ரூபாய்க்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.