சென்னை - அம்பத்தூர் காமராஜர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலெக்சாண்டர் தலைமை தாங்கினார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக ஊரகத் தொழில் துறை அமைச்சர் பென்ஜமின் கலந்துகொண்டு, அம்பத்தூர் சுற்றுவட்டார அரசுப் பள்ளியில் பயிலும் 987 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து மாணவிகள் பயன்பெறும் வகையில் ATAL TINKERING LAB திறப்பு விழாவை சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். இவருடன் திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் பேசிய அமைச்சர் பென்ஜமின், மாணவிகள் சினிமா பார்ப்பது, செல்போன் உபயோகப்படுத்துவது உள்ளிட்டவைகளை தவிர்த்துவிட்டு கல்வியில் மிகுந்த ஆர்வத்துடன் பயின்ற பள்ளிக்கும், தனது பெற்றோர்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.
மேலும், அவரது ஆசிரியரை மிகவும் மதித்ததால் தான் இந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளதாக நினைவுகூர்ந்தார். தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டுமே இதுபோன்ற மாணவ - மாணவிகளுக்கு சிறப்புத் திட்டங்கள் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு கல்வித் துறையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்து மாணவ-மாணவிகளுக்கு தான் அறிவு சார்ந்த வாழ்க்கையில் முன்னேறவும், இது போன்ற பலத் திட்டங்கள் தமிழ்நாடு அரசு செய்து வருவதாகவும், கல்விக்காக முதலமைச்சர் பழனிசாமி 36ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளார் என்பதையும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஏழை எளிய மக்களுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கிய அமைச்சர்